Breaking கேரளாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்!
கேரளாவின் களமசேரியில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்
கேரள மாநிலம் களமசேரியில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் வழிபாட்டு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாநாட்டு மையத்தில் நிகழ்ந்த அந்த குண்டு வெடிப்பில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குண்டு வெடிப்பில் படுகாயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. நேரில் கண்ட சாட்சிகளின் தகவல்களின்படி, குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது, மத வழிபாட்டு கூட்டத்தில் சுமார் 2,000 பேர் கலந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், குண்டு வெடிப்பால் அங்கு பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீசாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து எரிந்த நிலையில் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மாநில தீவிரவாத தடுப்புப் படையும் களமசேரி வந்தடைந்துள்ளது.
யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது. மாநாட்டின் கடைசி நாளான இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்வித்துறை இயக்குநருக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியை நாடு மன்னிக்காது: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்!
அனைத்து மருத்துவமனைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் உடனடியாக பணிக்கு திரும்புமாறும் அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
களமசேரி மருத்துவக் கல்லூரி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வசதிகளை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள் எனவும், மாவட்டத்தின் ஏனைய மருத்துவமனைகளையும் தயார் நிலையில் இருக்கவும் அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.