கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால், மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. அங்குள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. 368 பேர் உயிரிழந்தனர். ரூ.21,000 கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

அப்போது ஆசியாவிலேயே மிகப் பெரிய அணியான  இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்ததால் கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இடுக்கி, எடமலையார் உள்ளிட்ட அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பெரியாறு வழியாக வந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. இந்த அணை திறக்கப்பட்டதால்தான் கேரளாவின் ஒரு சில பகுதி கடும் வெள்ளத்தில்  சிக்கியதாக கூறப்பட்டது.

இதையடுத்து தற்போது தான் கேரள மாநிலம் வெள்ள பாதிப்பில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டும்  வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு முதல் மாலத்தீவு வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இங்கு 2 மாவட்டங்களுக்கும் வருகிற 7-ந்தேதி வரை ரெட் அலர்ட் எனப்படும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நெய்யாறு, அருவிக்கரை, பம்பா, சோலையார், போத்துண்டி உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. ஆலப்புழாவில் நேற்று 122 மிமீ மழை பெய்துள்ளது. இதுபோலேவே பாலக்காடு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள மலம்புழா அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது