புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, இந்திய விமானப் படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது இந்தியப் போர் விமான விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்டார். இவர் மார்ச் 1 அன்று விடுவிக்கப்பட்டார். இவருக்குப் பிரதமர் முதல் பொதுமக்கள் வரை பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

மார்ச் 1 அன்று மாலை ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் நிகல்பூரைச் சேர்ந்த விம்லேஷ் பெந்தாரா என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அபிநந்தனின் பெயரைச் சூட்டியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.

இதுகுறித்து அக்குழந்தையின் தாத்தா  கூறுகையில், “எனது மருமகளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அதற்கு முன்பு மூன்று நாட்களாக அபிநந்தன் குறித்த செய்திகளை மட்டும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். இதனால், குழந்தைக்கு விமானி அபிநந்தனின் பெயரை வைத்தோம். இது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

குழந்தையின் தாய் விம்லேஷ் பெந்தாரா கூறுகையில், “எனது குழந்தைக்கு அபிநந்தன் பெயர் வைப்பதன் மூலம் இந்திய போர் விமானிகளின் வீரத்தை நினைவுகூர்கிறோம். அவன் எதிர்காலத்தில் சிறந்த ராணுவ வீரனாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இதேபோல, ராஜஸ்தானிலுள்ள சங்கனீர் என்ற இடத்தைச் சேர்ந்த ரவி திக்கிவால் – நீலம் தம்பதிக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அபிநந்தன் என்று பெயர் வைத்துள்ளனர்.

இதுகுறித்து பெயர் சூட்டப்பட்ட குழந்தையின் தந்தை கூறுகையில், “ஒருவேளை ஆண் குழந்தை பிறந்தால் அபிநந்தன் என்ற பெயரை வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதுபோன்றுதான் நடந்தது. அபிநந்தன் திரும்பி வந்ததையும், எனக்கு மகன் பிறந்ததையும் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். அபிநந்தன் போன்று, எனது மகனும் நல்ல பெயரை பெற்றுத் தருவான் என கூறினார்.

இதேபோல, உபி  ஷாஜகான்பூரைச் சேர்ந்த திபு அவஸ்தி – மோனிகா தம்பதியருக்குக் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. இவர்கள் தங்கள் குழந்தைக்கு அபிநந்தனின் பெயரைச் சூட்டியுள்ளனர். அதேபோல, போர்ட்டர்கஞ்ச் சேர்ந்த ராஜன் மிஸ்ரா – நீத்து தம்பதியர் தங்களது குழந்தைக்கு அபிநந்தனின் பெயரைச் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் நடக்க, பெண் குழந்தைகளுக்கும் "அபி" என பெயர் சூட்டி அபிநந்தனை கவுரவித்து மகிழ்கின்றனர்.