செமிகண்டக்டர், ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங்: இந்திய அரசுடன் ஐபிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
செமிகண்டக்டர், ஏஐ, குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் மத்திய அரசுடன் ஐபிஎம் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது
உலகளவில் செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்தியா அந்தத்துறையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. செமிகண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டை ஈர்ப்பதுடன், உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்புக்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செய்ற்கை நுண்ணறிவிலும் இந்தியா தனது பார்வையை செலுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் செமிகண்டக்டர் துறையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தின் ஒருபகுதியாக, செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் மத்திய அரசுடன் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையிலும், நாட்டில் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் தீவிர கவனம் செலுத்தி வரும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒத்துழைப்பின் முக்கியத் தன்மையை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “இது நிச்சயமாக மிக முக்கியமான நாள், ஏனெனில் வரும் ஆண்டுகளில் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் தொழில்நுட்பங்கள் இவை மூன்றுதான் கல்வி, ஸ்டார்ட்-அப், மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கான கண்டுபிடிப்பு என மிகப்பெரிய வாய்ப்புகளை இந்த தொழில்நுட்பங்கள் பிரதிபலிக்கின்றன. உலகளாவிய திறமைகளை உருவாக்குவதற்கான பரந்த வாய்ப்பு இது.” என்றார்.
செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள் என்பதால் இந்த ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அழுத்தம் திருத்தமாக கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்குத் தனி நபர்களைத் தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட படிப்புகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்துடன் மேலும் 8 ஒப்பந்தங்களை ஐபிஎம் அறிவித்தது. கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகங்களுடன் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.
காசா மருத்துவமனை தாக்குதல்: சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் - பிரதமர் மோடி!
ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் செய்யப்படலாம் என கருதப்படும் பணிகளுக்கான வேலைவாய்ப்புகள நிறுத்தி வைப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தார். அதன்படி, சுமார் 7,800 வேலைகள் AI மூலம் மாற்றப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.