காசா மருத்துவமனை தாக்குதல்: சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் - பிரதமர் மோடி!
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 12 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதில், அப்பாவி பொதுமக்கள் பலரும் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி அராப் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றுள்ள நிலையில், நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. போர் விதிமுறைகளை தொடர்ந்து இஸ்ரேல் மீறி வருவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என காசா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி பேச்சுவார்த்தை முறிவு: 2024 தேர்தலில் பாதிப்பு?
தாக்குதல் நடத்தப்பட்ட இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா சபை, உலக நாடுகள் பலவும் வேதனையும், கண்டனமும் தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் உயிர் இழந்தது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். நடந்துகொண்டிருக்கும் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்புகள் கவலைக்குரிய விஷயமாகும். இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.