மத்தியப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் வர்மா, இடஒதுக்கீடு மற்றும் பிராமணப் பெண்கள் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பிராமண அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் வர்மா, தான் பேசிய ஒரு கருத்து மூலம் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் சங்கத்தில் (AJAKS) புதிய மாகாணத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இந்தச் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை போபாலின் அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற சங்க மாநாட்டில் பேசியபோது அவர் தெரிவித்த கருத்து அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்தோஷ் வர்மாவின் சர்ச்சைப் பேச்சு

"ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்குத் தாரை வார்க்கும் வரை அல்லது அவனுடன் உறவு கொள்ளும் வரை, இடஒதுக்கீடு (Reservation) தொடர வேண்டும்." என சந்தோஷ் வர்மா பேசியுள்ளார்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, பிராமண அமைப்புகள் வர்மாவின் இந்தக் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரது இந்தக் கூற்று அநாகரிகமானது, சாதி ரீதியான மற்றும் பிராமணப் பெண்களை மோசமாக அவமதிக்கும் செயல் என்று கண்டித்துள்ளனர்.

மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு

அகில இந்திய பிராமண சமாஜத்தின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா கூறுகையில், "பிராமணப் பெண்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட வேண்டும். இவரது கருத்துகள் அநாகரிகமானவை, ஆட்சேபனைக்குரியவை மற்றும் ஒட்டுமொத்த பிராமண சமூகத்தையே அவமதிப்பதாகும். விரைவில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படாவிட்டால், பிராமண சமாஜம் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடும்." என்றார்.

மத்திய அரசு பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாத்து வரும் நிலையில், அரசு ஊழியர் ஒருவர் நடத்தை விதிகளுக்கு மாறாகப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் புஷ்பேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பல மோசடிப் புகார்கள்

சந்தோஷ் வர்மா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்னதாக, மத்தியப் பிரதேச மாநில நிர்வாகச் சேவை அதிகாரியாக இருந்த வர்மா, தனக்கு எதிரான வழக்குகளில் சலுகை பெறுவதற்காக, நீதிமன்ற உத்தரவுகளைத் திருத்தியதாகவும், சிபிஐ நீதிபதியின் கையொப்பங்களைப் போலியாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

தனது பதவி உயர்வைப் பெறவும், இந்த போலியான ஆவணங்களை வர்மா பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இரண்டு பாலியல் வழக்குகளிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.