Asianet News TamilAsianet News Tamil

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை; 10 வருஷமா சொல்லிட்டு இருக்கேன் - திக் விஜய் சிங்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்

I dont trust EVMs saying since ten years says Digvijaya Singh smp
Author
First Published Jan 1, 2024, 4:57 PM IST

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்பட்ட போதிலிருந்தே அதன் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விடுத்து மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “விவிபேட் என்னும் ஒப்புகைச்சீட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தின்மூலம் ஒரு வாக்காளர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இந்த ஒப்புகைச் சீட்டுகள் இயந்திரத்தின் உள்ளே சேமிக்கப்படும். ஆனால், அதுபோன்று இல்லாமல் அந்த ஒப்புகைச் சீட்டுகள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் அதனைச் சரிபார்த்த பின்னர், அதற்கென்று இருக்கும் தனியான ஒரு வாக்குப்பெட்டியில் செலுத்தும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும்.” என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து இதனை தான் தெரிவித்து வருவதாகவும் மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்த சரமாரியான கேள்விகளை எழுப்பும் வீடியோ தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறேன், எனது வாக்கு யாருக்கு போடப்பட்டது என்று கூட எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற சிப் சொருகப்பட்ட ஒரு இயந்திரம் உலகில் இல்லை, அதில் ஹேக் செய்ய முடியாது. ஏனெனில், அதில் உள்ள மெபொருள் கூறும் உத்தரவுகளை அந்த சிப் பின்பற்றும். நீங்கள் 'A' என்று தட்டச்சு செய்தால் மென்பொருள் 'A' என்று சொல்லும் மற்றும் 'A' மட்டுமே அச்சிடப்படும்.” என்றார்.

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னத்தை அழுத்தினால், 'தாமரை' என்று சாப்ட்வேர் எழுதப்பட்டிருந்தால் என்ன அச்சிடப்படும்? காங்கிரஸ் தேர்தல் சின்னமா? அல்லது பாஜகவின் தாமரை சின்னமா? விவிபேட் வாக்குப்பதிவு இயந்திரம் உங்களுக்கு 7 விநாடிகள் காங்கிரஸ் தேர்தல் சின்னத்தை காட்டுகிறது. நாம் மகிழ்ச்சியுடன் வெளியேறுகிறோம். ஆனால், பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை அச்சிடப்படும். இந்த விளையாட்டை ராகுல் மேத்தாவின் வீடியோவில் பார்க்கலாம்.” என திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி: இந்திய தூதரகம் அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!

அனைத்து வளர்ந்த நாடுகளிலும் நடைபெறுவது போல் வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். “வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் கொஞ்சம் அதிக நேரம் பிடிக்கும். அதனால் பரவாயில்லை. ஆனால், தங்கள் ஓட்டு தாங்கள் விரும்பியவருக்குப் போனதாக பொதுமக்கள் நம்புவார்கள். இன்று அது கூட அவர்களுக்கு தெரியவில்லை.” எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியும், இந்திய தேர்தல் ஆணையமும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விரும்பினால், விவிபேட் அளிக்கும் ஒப்புகைச்சீட்டை நம்மிடம் காட்டலாம். அதனை நாம் வாக்குப் பெட்டியில் போடுவோம் என திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார். இதில் என்ன ஆட்சேபனை உள்ளது என கேள்வி எழுப்பும் அவர், இந்தக் கோரிக்கைக்காக ஆகஸ்ட் மாதம் முதல் தேர்தல் ஆணையத்தை சந்திக்க இந்தியா கூட்டணி நேரம் கேட்கிறது. ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு நேரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“இப்போது நமக்கு என்ன வழி இருக்கிறது? உச்ச நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக வீதியில் இறங்க வேண்டும். இதைத்தான் அரசியல் கட்சிகள், குறிப்பாக இந்தியா கூட்டணி விரைவில் முடிவு செய்ய வேண்டும்.” எனவும் திக் விஜய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios