தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களோடு சேர்ந்து மேற்கு வங்க சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை எப்படி வீழ்த்திவிட வேண்டும் என்று பாஜக முனைப்புடன் உள்ளது. அதன் காரணமாகவே பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மேற்கு வங்கத்துக்கு தொடர்ந்து படையெடுத்தவண்ணம் உள்ளனர். ஆட்சியை எப்படியும் தக்க வைத்துக்கொள்ளும் வேகத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளது. இதனால்  மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ஹூக்ளியில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை காட்டிலும் மோசமான விதி பிரதமர் மோடிக்கு காத்திருக்கிறது. மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன். என்னை மீறி பாஜகவால்  ஒரு கோல்கூட அடிக்க முடியாது. எந்த மோடியும் குஜராத்தும் வங்காளத்தை ஆள முடியாது. வங்காளம் மட்டுமே வங்காளத்தை ஆளும்.” என்று அதிரடியாகப் பேசினார்.