நான் மாம்பழம் பற்றி பேசினேன்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கிண்டல்!
மக்களவைத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறி வரும் பாஜகவை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஓரணியில் திரண்டுள்ளன. அதேசமயம், பாஜகவை பொறுத்தவரை கடந்த முறை வெற்றி பெற்றதை விட அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. அதாவது, 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.
பெண்களைப் பற்றிய எண்ணத்தை மாற்ற வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்!
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறி வரும் பாஜகவை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இப்போது 400 ப்ளஸ் என்று பேசுகிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆக குறையும். ஜூன் முதல் வாரத்தில், இது 175-200 என்ற வரம்பில் இருக்கும். நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழங்களின் விலையைப் பற்றி பேசுகிறேன். ஒவ்வொரு செய்தியும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டியதில்லை.” என பதிவிட்டுள்ளார்.