மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் காவலர் தனது முகத்தில் தாக்கி தன்னை திட்டியதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார்

மக்களவைத் தேர்தல் 2024இல் இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் நடைபெற்ற வாக்கு வாதத்தில், பெண் காவலர் கங்கனாவை அறைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனாவின் கருத்துக்களால் ஆத்திரமடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் அவரை அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Scroll to load tweet…

இந்த நிலையில், பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “மீடியா மற்றும் மக்களிடம் இருந்து எனக்கு போன் வருகிறது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். பாதுகாப்பு சோதனையின் போது இந்த சம்பவம் நடந்தது. பாதுகாப்பு சோதனை முடிந்து போது, வேறு ஒரு கேபினில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் காவலர், நான் அவரை தாண்டி செல்லும்போது, பக்கவாட்டில் இருந்து எனது முகத்தின் மீது தாக்கினார். என்னை தகாத வார்த்தைகளால் பேசி திட்டினார். ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்டேன். அதற்கு விவசாயிகளின் போராட்டம்தான் காரணம் என அவர் கூறினார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரிப்பது எனக்கு கவலை அளிக்கிறது, இதை நாங்கள் எவ்வாறு கையாள்வது.” என தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பளார் விட்ட பெண் காவலர்!

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூத்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.