மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது, அரசின்மை, ஊழல் மற்றும் சமய சார்பின்மையை ஊக்குவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார். மேற்கு வங்கம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளின் மையமாக மாறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தை பெண்களுக்கு எதிரான கொடுமைகளின் மையமாக மாற்றிவிட்டதாகச் சாடினார். 2026 இல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள்:

"பல ஆண்டுகளாக, வங்காளத்தை கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்தனர். அதன் பிறகு, மம்தா பானர்ஜி வந்தார். அவர் வங்காளத்தின் மண்ணை அத்துமீறல்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், குண்டுவெடிப்புகள் மற்றும் இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் நிறைந்த நிலமாக மாற்றிவிட்டார்..." என்றார்.

"மம்தா பானர்ஜி முதல்வரான பிறகு மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டனர்... திதி, என் பேச்சைக் கேளுங்கள், உங்கள் காலம் இப்போது முடிந்துவிட்டது. 2026 இல் பாஜக ஆட்சி அமைக்கும்..." என அமித் ஷா சொன்னார்.

சர்வதேச எல்லையில் வேலி:

"நாம் மேற்கு வங்கத்தில் பாஜக அரசை அமைக்க வேண்டும், அத்துமீறல்களைத் தடுக்க வேண்டும், ஊழலைத் தடுக்க வேண்டும், இந்துக்கள் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும்..." என்றார்.

வங்கதேசத்துடன் இந்தியாவின் சர்வதேச எல்லையில் வேலி அமைப்பதற்கு மாநில அரசு நிலம் வழங்க மறுத்துவிட்டதாகவும், அத்துமீறலைத் தடுக்க மத்திய அரசின் முயற்சிகளை பானர்ஜி தடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சவால் விட்ட ஷா:

“மம்தா பானர்ஜி வங்கதேச மக்களுக்காக நாட்டின் எல்லைகளைத் திறந்துவிட்டார். அவர் அத்துமீறல்களை அனுமதிக்கிறார். மம்தா பானர்ஜியால் அத்துமீறல்களைத் தடுக்க முடியாது; பாஜக அரசால் மட்டுமே அதைச் செய்ய முடியும்” என வலியுறுத்தினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல்களின் போது நடந்த வன்முறைச் சம்பவங்கள் பற்றிக் கடுமையாக விமர்சித்த ஷா, முதல்வருக்கு நேரடியாக சவால் விடுத்தார். “... திதிக்கு (மம்தா பானர்ஜி) தைரியம் இருந்தால், வன்முறையின்றி தேர்தலில் போட்டியிட முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அவர் டெபாசிட் இழப்பார்” எனக் குறிப்பிட்டார்.