ஹரியானாவில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் ‘HR88B8888’ என்ற விஐபி நம்பர் பிளேட், இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.17 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணின் அடிப்படை விலை ரூ.50,000 ஆக இருந்தது.

இந்தியாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக விலைக்கு கார் பதிவு எண் (Number Plate) ஒன்று ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் ‘HR88B8888’ என்ற விஐபி நம்பர் பிளேட், ரூ.1.17 கோடிக்கு விற்பனையாகி தேசிய அளவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ரூ.50,000 முதல் ரூ.1.17 கோடி வரை

ஹரியானா மாநிலம் தனது விஐபி அல்லது 'ஃபேன்சி' (Fancy) நம்பர் பிளேட்களை ஒவ்வொரு வாரமும் ஆன்லைன் மூலம் ஏலம் விடுகிறது.

இந்த ஏலத்திற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 9 மணி வரை பெறப்பட்டு, புதன்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த வாரம் ஏலத்திற்கு வந்த எண்களில், ‘HR88B8888’ என்ற எண்ணுக்கு மட்டும் மொத்தம் 45 விண்ணப்பங்கள் குவிந்தன. இந்த எண்ணின் அடிப்படை ஏலத் தொகை வெறும் ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏலம் விறுவிறுப்பாக உயர்ந்து, நண்பகல் 12 மணிக்கு இதன் ஏலத்தொகை ரூ.88 லட்சமாக இருந்தது. மாலை 5 மணிக்கு ரூ.1.17 கோடி என்ற சாதனை உச்சத்தை எட்டி முடிவடைந்தது.

கடந்த வாரம், ‘HR22W2222’ என்ற பதிவு எண் ரூ.37.91 லட்சத்திற்கு ஏலம் போனது. தற்போது ரூ.1.17 கோடிக்கு விற்பனையாகியுள்ள இந்த எண் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது.

HR88B8888-ன் அர்த்தம் என்ன?

‘HR88B8888’ என்பது ஏலம் மூலம் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஒரு தனித்துவமான விஐபி பதிவு எண் ஆகும்.

HR: இது ஹரியானா மாநிலக் குறியீடு, வாகனம் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.

88: இது ஹரியானா மாநிலத்திற்குள் உள்ள ஒரு குறிப்பிட்ட மண்டல போக்குவரத்து அலுவலகம் (RTO) அல்லது மாவட்டத்தைக் குறிக்கிறது.

B: இது குறிப்பிட்ட RTO-வில் வழங்கப்படும் வாகனத்தின் தொடர் குறியீட்டைக் (Series Code) குறிக்கிறது.

8888: இது வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட தனித்துவமான, நான்கு இலக்கப் பதிவு எண் ஆகும்.

இந்த நம்பர் பிளேட் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுவதற்குக் காரணம், இதில் உள்ள ஆங்கில எழுத்து 'B' பெரிய எழுத்தில் எழுதப்படும்போது பார்ப்பதற்கு எண் '8' போலவே தோற்றமளிக்கும். இதனால் இந்த நம்பர் பிளேட் கிட்டத்தட்ட எட்டு என்ற எண் தொடர்ச்சியாக இருப்பது போல் காட்சியளிக்கிறது. மேலும், எண் 8 என்பது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

கேரளாவில் ₹46 லட்சத்திற்கு நம்பர் பிளேட்

சமீபத்தில், இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், கேரளாவைச் சேர்ந்த கோடீஸ்வரரான வேணு கோபாலகிருஷ்ணன் என்பவர், தனது லம்போர்கினி உரஸ் பெர்ஃபார்மண்டே (Lamborghini Urus Performante) காருக்காக "KL 07 DG 0007" என்ற விஐபி நம்பர் பிளேட்டை ரூ.45.99 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். ரூ.25,000-ல் தொடங்கிய இந்த ஏலம், ஜேம்ஸ் பாண்ட் குறியீடான '0007' மீதான மோகத்தால் உச்சத்தை அடைந்து மாநில அளவில் சாதனை படைத்தது.