டாடா ஃபைனான்ஸ் நிதி முறைகேட்டால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவருக்கு ரத்தன் டாடா அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை நிலைநாட்டவும் அவர் எப்படி 800 கோடி ரூபாயை வழங்கினார்.
டாடா குழுமத்தின் முன்னாள் இயக்குநரான ஆர். கோபாலகிருஷ்ணன், ரத்தன் டாடாவின் நேர்மை மற்றும் அவர் தனது முதலீட்டாளர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற 800 கோடி ரூபாயை எப்படித் தயங்காமல் வழங்கினார் என்பது குறித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை தனது லிங்க்டின் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டாடா பைனான்ஸில் முறைகேடு?
பல ஆண்டுகளுக்கு முன்பு, டாடா ஃபைனான்ஸ் (Tata Finance) நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக 'பம்பாய் ஹவுஸ்' அலுவலகத்திற்கு ஒரு அநாமதேய கடிதம் வந்தது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், நிதிகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டாலும், அந்த நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது.
கலங்கிய முதியவர் - ரத்தன் டாடாவின் பதில்
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மற்றொரு டாடா நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தில் ரத்தன் டாடா பங்கேற்றார். அப்போது கேள்வி பதில் நேரத்தில், ஒரு முதியவர் எழுந்து நடுக்கமான குரலில், "மிஸ்டர் டாடா, எனது ஓய்வுக்கால சேமிப்பு முழுவதையும் டாடா ஃபைனான்ஸில் முதலீடு செய்துள்ளேன். என் பணம் என்னவாகும்?" என்று கேட்டார்.
ரத்தன் டாடா அந்த முதியவரின் கண்களை நேராகப் பார்த்து, ஒரு நொடிகூட யோசிக்காமல் பதிலளித்தார். "எவ்வளவு பணம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் உங்களுக்கு வாக்குத் தருகிறேன் - உங்களில் ஒருவராவது ஒரு பைசாவைக்கூட இழக்க நான் விடமாட்டேன்" என்று உறுதியோடு தெரிவித்தார்.
வாக்கைக் காப்பாற்ற 800 கோடி ரூபாய்
கூட்டம் முடிந்ததும், கோபாலகிருஷ்ணன் அவரிடம், "சார், நீங்கள் கொடுத்த வாக்குறுதியால் 500 முதல் 600 கோடி ரூபாய் வரை நமக்குச் சுமை ஏற்படலாம்" என்று எச்சரித்தார். ஆனால் ரத்தன் டாடா அமைதியாகத் தலையசைத்தார்.
அதன்பின் நடந்த போர்டு மீட்டிங்கில், தனது வாக்கைக் காப்பாற்றுவதற்காக 800 கோடி ரூபாயை வழங்க ரத்தன் டாடா கையெழுத்திட்டார். இது நிறுவனத்தின் பெயரைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவு அல்ல, சாதாரண முதலீட்டாளருக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவு.
"இன்றைய உலகில் குறுக்கு வழியில் லாபம் ஈட்டப் பலரும் துடிக்கும் நிலையில், லாப நஷ்டக் கணக்கை விட நம்பிக்கைதான் முக்கியம் என்பதை ரத்தன் டாடா உலகுக்குக் காட்டியுள்ளார்" என்று கோபாலகிருஷ்ணன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


