ஒடிசா ரயில் விபத்து எப்படி நடந்தது? ரயில்வே வாரியம் விளக்கம்!
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில்கள் விபத்து தொடர்பாக செய்தியாளர் சந்திப்பை நடத்திய ரயில்வே வாரியம், சிக்னலில் சில கோளாறுகள் இருந்ததாக தெரிவித்துள்ளது
இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வணிக மேம்பாட்டு உறுப்பினர் ஜெயா வர்மா கூறுகையில், விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் மணிக்கு சுமார் 128 கி.மீ வேகத்தில் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். முதற்கட்ட கண்டுபிடிப்புகளின்படி, சிக்னலில் சில கோளாறுகள் உள்ளதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விரிவான அறிக்கைக்கு பின்னர் முழு விவரம் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 128 கிமீ வேகத்தில் சென்றிருக்கிறது. பெங்களூரு - ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் ரயில் மணிக்கு 126 கிமீ வேகத்தில் சென்றிருக்கிறது. இரண்டு ரயில்களும் அனுமதிக்கப்பட்ட வேகத்தில்தான் சென்றுள்ளது. எனவே, ரயில்கள் அதிகமான வேகத்தில் செல்லவில்லை என ஜெயா வர்மா கூறியுள்ளார். அத்துடன், 'கிரீன்' சிக்னல் கிடைத்த பின்னரே ரயில் முன்னோக்கி நகர்ந்ததாக பலத்த காயங்களுக்கு உள்ளான ரயில் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அவர் எந்த சிக்னலையும் மீறி செல்லவில்லை. ரயிலை அதிவேகமாகவும் ஓட்டவில்லை எனவும் ஜெயா வர்மா தெரிவித்துள்ளார்.
மூன்று ரயில்கள் மோதியதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என தெரிவித்த அவர், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே விபத்தை எதிர் கொண்டது, கோரமண்டல் ரயில்தான் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சரக்கு ரயில் இரும்புத் தாதுக்களை ஏற்றி சென்றதால் அது தடம்புரளவில்லை. அதன் மீது மோதிய கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் டவுன் லைனில் விழுந்து, அந்த சமயத்தில் டவுன் லைனில் வந்து கொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் மீது மோதியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்ட பஹனகா பகுதியில் 4 ரயில் வழித் தடங்கள் உள்ளன. இதில் இரண்டு பிரதானமான ரயில் வழித்தடங்கள். மற்ற இரண்டும் லூப் தடங்கள். பிரதான தடங்களில் செல்லும் ரயில்களுக்காக லூப் தடத்தில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் நிலையத்தில் க்ரின் சிக்னல் கிடைத்ததால் இரண்டு ரயில்களும் அதன் அனுமதிக்கப்பட்ட முழு வேகத்தில் சென்றுள்ளன எனவும் ஜெயா வர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ரயில் விபத்துகள்: எந்த அமைச்சரின் கீழ் எத்தனை விபத்துகள்?
கவாச் பாதுகாப்பு அமைப்பால் விபத்தை தடுத்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயா வர்மா, அதிக வேகத்தில் நகரும் வாகனத்தின் முன் திடீரென ஒரு தடை வந்தால், உலகில் எந்த தொழில்நுட்பமும் விபத்தைத் தடுக்காது என்றார். ரயில்வேக்கு பாதுகாப்பே முதன்மையானது. ஆதாரங்கள் சிதைக்கப்படாமல் இருப்பதையும் எந்த ஆதாரமும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.