ஐந்து ஆண்டுகளில் விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு: மத்திய அரசு சொன்ன பதில்!
விளம்பரத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசு அளித்துள்ளது

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில், உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு மத்திய பாஜக அரசு பதிலளித்து வருகிறது.
அந்த வகையில், விளம்பரத்திற்காக மத்திய அரசால் செலவிடப்பட்ட தொகை குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சையது நசீர் ஹுசைன் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “நடப்பாண்டு உட்பட கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கான விளம்பரம் மற்றும் அரசின் விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட தொகையின் விவரங்கள் என்ன? அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட தொகையின் அடிப்படையில் முதல் 10 செய்தித்தாள்கள் மற்றும் டிவி சேனல்களின் விவரங்கள்? கடந்த சில வருடங்களில் விளம்பரத்திற்கான செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதை அமைச்சகம் அறிந்திருக்கிறதா? ஒருவேளை அறிந்திருப்பின், விளம்பரத்திற்கான செலவினங்களைக் கட்டுப்படுத்த ஏதேனும் நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்கிறதா?” என்பன உள்ளிட்ட கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.
அதற்கு விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்துள்ள பதிலில், கடந்த 5 ஆண்டுகளில் விளம்பர செலவுக்காக ரூ.2,713.72 கோடியை மத்திய அரசு செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அரசின் விளம்பரத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்னணு, அச்சு மற்றும் வெளிப்புற விளம்பரங்களுக்காக, 2018-19 நிதியாண்டில் ரூ.1106.88 கோடியும், 2019-20ஆம் நிதியாண்டி ரூ.627.67 கோடியும், 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.349.0 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ.264.7 கோடியும், 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.331.01 கோடியும், நடப்பு நிதியாண்டில் 2023 ஜூலை 13ஆம் தேதி வரை ரூ.34.37 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் தொடர்பு பணியகம் மூலம் முதல் 10 செய்தித்தாள்கள், டிவி சேனல்கள் உள்ளிட்டவைகளில் அரசாங்கத்தால் செலவு செய்யப்பட்ட தொகை மற்றும் விவரங்கள் மத்திய தகவல் தொடர்பு பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.davp.nic.in -இல் கிடைக்கும் எனவும் அமைச்சர் அனுராஜ் சிங் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் - விசாரணை தள்ளி வைப்பு!
வாடிக்கையாளர் அமைச்சகங்கள்/துறைகளால் சுட்டிக்காட்டப்படும் பார்வையாளர்களை இலக்காக கொண்டும், பட்ஜெட் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்க திட்டங்கள்/திட்டங்கள் பற்றிய விளம்பரம்/விழிப்புணர்வு தொடர்பான பிரசாரத்தை மத்திய தகவல் தொடர்பு பணியகம் மேற்கொள்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.