புதுடெல்லி, நவ. 12-

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தன்னிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக்கு நேற்று வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரூபாயை மாற்றிவிட்டு சென்ற ராகுல்காந்தி, பிரதமர் மோடி அரசு சாமானிய மக்களுக்கானதாக இருக்க வேண்டும், குறிப்பிட்ட 20 நபர்களுக்கான அரசாக இருக்கக்கூடாது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

மோடி அறிவிப்பு

நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் வகையில், புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை தடை செய்து, பிரதமர் மோடி, கடந்த 8-ந்தேதி அறிவித்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் முதல் மக்கள், தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில், தபால்நிலையங்களில் கொடுத்து மாற்றி வருகின்றனர். ஏ.டி.எம்.களும் முழுமையாக செயல்பாட்டுக்கு வராததால், மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

ராகுல் வருகை

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் தன்னிடம் உள்ள பணத்தை மாற்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வந்தார். மாலை 4.25 மணிக்கு வங்கிக் கிளைக்கு வந்த ராகுல் காந்தியைப் பார்த்ததும் வரிசையில் நின்று இருந்த மக்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

40 நிமிடங்கள்

வரிசையில் நின்று இருந்த ஏராளமானோர் ராகுல்காந்தியுடன் செல்பி எடுத்தனர். ரூபாய் நோட்டுக்கள் மாற்ற வந்திருந்த மக்களும் வரிசையில் நிற்பதை விட்டு, ராகுல் காந்தியை பார்க்க கூடிவிட்டனர். அதன்பின், போலீசார் கூட்டத்தைக் ஒழுங்குபடுத்தி, வரிசையை முறைப்படுத்தினர். ராகுல்காந்தி, ஏறக்குறைய 40 நிமிடங்கள் வரிசையில் நின்று தன்னிடம் உள்ள பணத்தை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றார். வங்கி ஊழியர்களும் ராகுல் காந்தியுடன் புகைப்படமும், செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

சிரமத்தை அறிந்தேன்

அதன்பின், வெளியே வந்த ராகுல்காந்தி நிருபர்களிடம் பேசுகையில், “ அரசு என்பது ஏழை மக்களுக்கானதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட 15 முதல் 20 நபர்களுக்காக இருக்கக் கூடாது. மக்கள் தங்கள் வசம் இருக்கும் 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வரிசையில் நிற்கும்போதுதான் அவர்கள் படும் சிரமத்தை நான் நிற்கும்போது தெரிந்து கொண்டேன்.

பிரதமருக்கு தெரியுமா?

இந்த நாட்டில் எந்த கோடீஸ்வரரும் வரிசையில் நிற்கப்போவதில்லை. ஏழையும், சாமானிய மக்களும்தான் வரிசையில் நிற்கிறார்கள். மக்கள் பெரும் சிரமத்தையும், கஷ்டங்களையும் சந்திப்பதால்தான் நான் இங்கும் வந்தேன். நான் என்னிடம் இருக்கும் ரூ.4 ஆயிரம் பணத்தை கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுக்களை வரிசையில் நின்று பெற்றுக்கொண்டேன்.

மக்கள் அனுபவிக்கும் வேதனைகளையும், துன்பங்களையும் பிரதமர் மோடியும், பணக்காரர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.