மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் , செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள், உணவு பொருட்கள் மீதும், குளிர்பானங்கள் மீதும் வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் மற்றும் மதிப்பு கூட்டு வரி வசூலிக்கப்படுகிறது. இவையெல்லாம் நேர்மையற்ற செயல். உணவு பொருட்கள் மீது சேவை கட்டணம் வசூலிப்பதற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. இது ஒரு நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கை என மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் யாரும் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை. ஓட்டல் உரிமையாளர்கள், உணவு பில் தொகையில் சேவை கட்டணத்தை குறிப்பிடுவதற்கு பதிலாக, உணவு பொருட்களின் பட்டியலிலேயே (மெனு கார்டு) சேவை கட்டணம் உள்ளிட்ட மொத்த விலை விவரத்தையும் குறிப்பிட வேண்டும் அல்லது அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

இதன்மூலம், அந்த குறிப்பிட்ட உணவு சாப்பிடலாமா, வேண்டாமா என்று வாடிக்கையாளர்களே தீர்மானிக்க முடியும். இதுபோன்று முன்கூட்டியே எதுவும் தெரிவிக்காமல் சேவை கட்டணம் வசூலித்தால், அதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

ஒருவேளை, சேவை கட்டணம் செலுத்தினாலும், அது ஏழை சர்வருக்கு செல்கிறதா அல்லது ஓட்டல் உரிமையாளரின் பாக்கெட்டுக்கு செல்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். எனக்கு தெரிந்தவரை, அனைத்து செலவுகளையும் மதிப்பிட்டுத்தான், உணவுபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, சேவை கட்டணம் என்ற பெயரில் தனியாக வசூலிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த விதிமுறையை மீறி சேவை கட்டணம் வசூலிக்கும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தற்போதைய சட்டத்தில் வழி இல்லை.

எனவே, புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவில் அதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைப்பதற்கும் அதில் ஒரு உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அம்மசோதா, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று கருதுகிறோம்.

அந்த மசோதாவில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்திடமும் கருத்து கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.