தெலங்கானாவில் தலித் இளைஞரை ஆணவக் கொலை செய்த அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டார்.
தெலங்கானாவைச் சேர்ந்த தலித் இளைஞர் பிரணய் குமாரும் தொழிலதிபரின் மகள் மாருதி ராவின் மகள் அம்ருதாவும் காதலித்தனர். ஆனால், இவர்களுடைய காதலை சாதியை காரணம் ஏற்க மறுத்தார் அம்ருதாவின் தந்தை. ஆனாலும், மாருதி ராவ் எதிர்ப்பை மீறி பிரணய் குமாரும் அம்ருதாவும் 2018ல் திருமணம் செய்துகொண்டனர். இதனால், மாருதி ராவ் ஆத்திரமடைந்தார்.


இந்நிலையில் கர்ப்பமடைந்த அம்ருதாவை மருத்துவ பரிசோதனைக்காக பிரணவ் அழைத்துச் சென்றார். மருத்துவமனையிலிருந்து அம்ருதாவும் பிரணய்குமாரும் வெளியே வரும்போது கூலிப் படையைச் சேர்ந்தவர்கள் பிரணய் குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்தச் சம்பவம் மருத்துவமனையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இந்தக் கொலை சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. கண் முன்னே காதல் கணவனை பறிக்கொடுத்த அம்ருதாவுக்காக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.


இந்தக் கொலை சம்பவத்தில் கூலி படையைச் சேர்ந்தவர்களையும் அவர்களை ஏவிவிட்ட அம்ருதாவின் தந்தை மாருதி ராவையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு நளகொண்டா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இதற்கிடையே அம்ருதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையை வளர்த்துவரும் அம்ருதா, நீதிமன்ற தீர்ப்புக்காகக் காத்திருந்தார். 
இந்நிலையில் அண்மையில் ஜாமீனில் வெளியேவந்த அம்ருதாவின் தந்தை ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். தனியாக இருந்த மாருதி ராவ் இன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம்  தொடர்பாக போலீஸார் விசாரித்துவருகின்றனர். மாருதிராவின் மரணம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.