வரலாற்று தருணம்: அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..
அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (டிசம்பர் 30) மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை, அயோத்தி தாமில் திறந்து வைத்தார். ரூ. 1450 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த , விமான நிலையத்தின் முதல் கட்டம் மிகப்பெரிய முனையக் கட்டிடத்தை உள்ளடக்கியது. 6500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்ட அயோத்தி விமான நிலையம், ஜனவரி 6 முதல் செயல்படத் தொடங்க உள்ளது, இது ரூ.1,450 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான திட்டமாகும். ஆண்டுதோறும் ஏறக்குறைய 10 லட்சம் பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில், தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு உதவும்.
முன்னதாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்திக்கு சென்றார். அதன்படி இந்த நிலையில் அயோத்தி சென்றுள்ள பிரதமர் மோடி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்தி பென் படேல் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை வாகன பேரணி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி காரின் கதவுகளை திறந்து நின்றவாறு கையசைத்து மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
ரூ.85,000 கோடிக்கு நலத்திட்டங்கள்! அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக மாறப்போகும் அயோத்தி!
இதை தொடர்ந்து ரூ.240 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 2 அமிர்த பாரத் ரயில்கள் என மொத்தம் 8 புதிய ரயில்களை மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.