கல்வி நிறுவன தேர்வுகளில் இந்தி கட்டாயமில்லை: தமிழகத்தின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு!
என்ஐடி உள்ளிட்ட ஒன்றிய அரசு கல்வி நிறுவன தேர்வுகளில் இந்தி கட்டாயமில்லை என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
என்.ஐ.டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிக்கையை கடந்த 17ஆம் தேதி தேசிய தேர்வு முகமை (National Testing Agency) வெளியிட்டது. அதில் இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது.
ராய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், கோழிக்கோடு, சூரத்கல், ராஞ்சி, ஹமிர்பூர், சில்சார், குருச்சேத்திரா ஆகிய என்.ஐ.டி.-கள், ஜெய்ப்பூரில் உள்ள எம்.என்.ஐ.டி ஆகிய நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பப்படுவதற்காக வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில், இந்தி மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்ததும் 20 சதவீதம் மற்றும் 30 சதவீதம் மதிப்பெண்கள் தரப்பட்டு இருந்ததும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் தேர்வர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்புகளை அதிகரித்து இந்தி பேசாத மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடிய இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். “தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (NIT) மற்றும் ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பிற நிறுவனங்களில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்குத் தேசிய தேர்வு முகமை (NTA) இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்கி இருப்பது மொழிச் சமத்துவத்தைக் குலைக்கும் செயலாகும். பன்முகத்தன்மையை அப்பட்டமாக அவமதிப்பதாகும். இவ்வாறு இந்தியைத் திணிப்பது தமிழ்நாடு உள்ளிட்ட பிற இந்தி பேசாத மாநில இளைஞர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக உள்ளது.” என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் கையால் எழுதப்பட்ட விளம்பர கடிதம் ரூ.1.4 கோடிக்கு ஏலம்!
அதேபோல், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிவிக்கைக்கு கண்டனம் தெரிவித்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், இத்தகைய அநீதி இந்தி அல்லா மாணவர்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியது, இந்தித் திணிப்பை கைவிட வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், என்ஐடி உள்ளிட்ட ஒன்றிய அரசு கல்வி நிறுவன தேர்வுகளில் இந்தி கட்டாயமில்லை என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த புதிய அறிவிப்பில், இந்தி கட்டாயம் அல்ல, ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதிக் கொள்ளலாம் என்று மாற்றப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி இது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தி பேசாத அனைத்து மாநில மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். மொழிப் பன்மைத்துவத்தை பாதுகாப்பதிலும், இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்துவதிலும் எப்போதும் முன்னிற்போம்.” என்று கூறியுள்ளார்.