ஸ்டீவ் ஜாப்ஸ் கையால் எழுதப்பட்ட விளம்பர கடிதம் ரூ.1.4 கோடிக்கு ஏலம்!
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கையால் எழுதப்பட்ட அரிய விளம்பரக் கடிதம் ரூ.1.4 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது
ஆப்பிள் தயாரிப்புகள் புதுமையானவை மற்றும் விலை உயர்ந்தவை என்று அறியப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் பழைய மாடல்கள் கூட, அதனை சேகரிப்பாளர்களுக்கு மதிப்புமிக்கவையாக இருக்கின்றன. உதாரணமாக, முதல் தலைமுறை ஐபோன் அண்மையில் மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களையும் தாண்டி, அதன் வரலாற்று பரிணாம வளர்ச்சி மற்றும் ஆரம்பகால பிராண்டிங் உடன் தொடர்பு கொண்ட பொருட்களையும் சேகரிப்பதை பலரும் பெருமிதமாக கருதுகிறார்கள்.
அதற்கு சமீபத்திய உதாரணம், Apple-1 கணினிக்காக அதன் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ், தனது கைப்பட எழுதிய கடிதம். RR ஏல நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஏலத்தில், முதல் ஆப்பிள் கணினி அல்லது ஆப்பிள்-1 கணினிக்காக ஸ்டீவ் ஜாப்ஸ் தனது கையால் எழுதிய விளம்பரக் கடிதம் 1,75,759 அமெரிக்க டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.4 கோடிக்கு விற்பணையாகியுள்ளது.
இந்த விளம்பரக் கடிதம் 1976ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் தனது கைப்பட தானே எழுதியதாக அறியப்படும் சிலவற்றில் இந்த கடிதமும் ஒன்று என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்கடிதத்தில், ‘ஸ்டீவன் ஜாப்ஸ்’ என அவர் கையெழுத்திட்டுள்ளார். அதில், ஸ்டீவ் ஜாப்ஸின் பெற்றோரது வீட்டு முகவரியும், தொலைபேசி எண் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய அந்த விளம்பரக் கடிதம் கருப்பு மையால், 8.5 x 11 பைண்டர் தாளில் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. Apple-1 கணினிக்கான தோராயமான வரைவு விவரக்குறிப்பும் அதில் இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்ப வரலாற்றின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். இது ஆப்பிளின் ஆரம்ப நாட்களையும், தொழில்நுட்ப புரட்சியைத் தூண்டிய ஸ்டீவ் ஜாப்ஸின் தொலைநோக்குப் பார்வையை பற்றிய நுண்ணறிவையும் எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.
நுணுக்கமாக கவனம் செலுத்தும் ஸ்டீவ் ஜாப்ஸின் திறன் அக்கடிதத்திலும் பிரதிபலிக்கிறது. ஆப்பிள்-1 கணினியானது, 6800, 6501 அல்லது 6502 மைக்ரோப்ராசஸரை பயன்படுத்துவதாகவும், அடிப்படை மென்பொருள் கிடைப்பதால் 6501 அல்லது 6502 பரிந்துரைக்கப்படுவதாகவும் அக்கடிதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார். அனைத்து பவர் சப்ளைகள், 8K பைட்டுகள் ரேம், முழு CRT டெர்மினல்-இன்புட், காம்போஸைட் வீடியோ வெளியீடு மற்றும் எட்ஜ் கனெக்டர் வழியாக 65K க்கு முழு விரிவாக்கம் என கணினியின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளும் அந்த விளம்பரக் கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.
அக்டோபர் 14 வரும் சூரிய கிரகணம்.. எங்கு தெரியுமா.? வெறும் கண்களால் பார்க்கலாமா.? முழு விபரம் இதோ !!
சுவாரஸ்யமாக, ஜாப்ஸ் "பேசிக் ஆன் தி வே (ROM)" என்றும் குறிப்பிட்டுள்ளார். இது Apple-1இல் செய்யப்படவில்லை. ஆனால், அதன் வாரிசான Apple IIஇல் செயல்படுத்தப்பட்டது. அந்த விளம்பர கடிதத்தில், கணினியின் விலை 75 அமெரிக்க டாலர்கள் என ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.