ஆப்பிளை ஓடையில் வீசிய விவசாயிகள்: விசாரணைக்கு இமாச்சல் அரசு உத்தரவு!
ஆப்பிளை விவசாயிகள் ஓடையில் வீசியதாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்த இமாச்சலப்பிரதேச அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்
இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள ரோஹ்ரு பகுதியில் ஆப்பிள் விவசாயிகள் சிலர் தங்களது விளைபொருட்களை ஓடையில் வீசுவது போன்று வெளியாகியிருக்கும் வீடியோவின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் பொருட்டு அதுகுறித்தான விசாரணைக்கு அம்மாநில தோட்டக்கலைத்துறை அமைச்சர் ஜகத் சிங் நேகி உத்தரவிட்டுள்ளார்.
அந்த வீடியோ 20 நாட்கள் பழமையானது என தெரிவித்துள்ள அவர், சாலை மூடப்பட்டதால் ஆப்பிள்கள் அழுகி விட்டதாக கூறப்படும் கூற்றையும் அவர் மறுத்துள்ளார். அந்த சாலை மூடப்பட்ட உடனேயே மாற்று வழி திறக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பரப்பப்பட்டதன் பின்னணியில் பாஜகவினர் இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜகத் சிங் நேகி, இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட துணை ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவும் அந்த வீடியோவில், ரோஹ்ரு நகரில் சாலையோரத்தில் பிக்கப் டிரக் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது; அதிலிருந்து கூடைகளை எடுத்து ஆப்பிள்களை சிலர் ஓடையில் கொட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளி மாயம்.. ஸ்கெட்ச் போட்டு லாரியோடு தூக்கிய சம்பவம்..
கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால், கிராமத்தை பிரதான சாலையுடன் இணைக்கும் பிளாசன்-சன்ரி-பத்சாரி சாலை ஜூலை 9 முதல் மூடப்பட்டதாகக் கூறி தாசில்தாருக்கு வரல் கிராமத்தின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், விவசாயிகள் மூன்று பேர் சுமார் 68 ஆப்பிள் பெட்டிகளை ஓடையில் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்த வீடியோவை தான் எடுக்கவில்லை என விவசாயி கூறியதாக அமைச்சர் ஜகத் சிங் நேகி தெரிவித்துள்ளார். கனமழையில் சேதமடைந்த ஆப்பிள்களை விவசாயி தூக்கி எறிந்ததாகவும், ஆனால் அதை வேறு சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஆப்பிள் விவசாயம் பிரதாணமாக இருக்கும் நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில எதிர்க்கட்சியினர், ஆளும் காங்கிரஸ் அரசை விமர்சித்து வருகின்றனர். “சிம்லாவில் உள்ள ஆப்பிள் விவசாயிகள் ஆப்பிள்களை தூக்கி எறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆப்பிள் சந்தைகளை அடைவதற்கு காங்கிரஸ் அரசு முயற்சி எடுக்கவில்லை. அதே காங்கிரஸ்தான் டெல்லியில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறது.” என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மாநிலத்தின் ஆப்பிள் பெல்ட்டில் உள்ள பல இணைப்புச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் ஆப்பிள்களின் போக்குவரத்து பெரும் பிரச்சினையாக மாறும் எனவும் பாஜக செய்தித் தொடர்பாளர் சேத்தன் ப்ராக்தா தெரிவித்துள்ளார். “அரசு நிறுவனங்கள் முன்பு ஜூலை 15க்குள் சேகரிப்பு மையங்களை அமைத்தன, ஆனால் இந்த முறை அத்தகைய வசதி எதுவும் செய்யப்படவில்லை. சேகரிப்பு மையங்கள் இல்லாதது மற்றும் சாலைகள் மூடப்பட்டுள்ளது ஆகியவை ஆப்பிள் விவசாயிகளின் வாழ்க்கையை பரிதாபகரமாக ஆக்கியுள்ளது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிம்லா, சோலன் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களை உள்ளடக்கிய சிம்லா மண்டலத்தில் சுமார் 240 சாலைகள் உட்பட 400க்கும் மேற்பட்ட சாலைகள் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.