உத்தரகாண்ட் மாநிலத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கட்டிய கல்லூரியில் மத வேற்றுமையின்றி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

இது குறித்து முதல்வர் ஆதித்யநாத் கூறுகையில், “நான் எழுப்பிய இந்த கல்லூரியில் நேர்மை, சகிப்புத்தன்மை, மனிதநேயம் இருக்கும், எந்த விதமான வேறுபாடுகளும் இருக்காது” எனத் தெரிவித்தார்.

கடந்த 1999ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள யாம்கேஸ்வர் மாவட்டத்தில், பித்யானி எனும் இடத்தில் “மகாயோகி குருகோரக்நாத் டிகிரி கல்லூரி”யை யோகி ஆதித்யநாத் தொடங்கினார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின், அந்த கல்லூரிக்கு அரசின் நிதி உதவி தரப்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் தற்போது 150-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் படித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலும் மாணவிகள்தான் அதிகமாக படிக்கிறார்கள். கடந்த 2005ம்ஆண்டு எச்.என்.பி. கர்வால் பல்கலையின் அங்கீகாரத்தை இந்த கல்லூரி பெற்று இருக்கிறது. 

இந்த கல்லூரியில் பணிபுரியம் பேராசிரியர்கள் அனைவரும் “நெட்” தேர்வு முடித்தவர்கள்.

இந்துத்துவத்தில் பற்றுள்ள ஒரு தலைவர் நடத்தும் இந்த கல்லூரியில் பலஆண்டுகளாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்லூரி குறித்து கல்லூரியின் முதல்வர் அப்தாப் அகமது கூறுகையில், “ இந்த கல்லூரியின் சிறப்பு அம்சமே இங்கு சாதி, மதம், நிறம் அடிப்படையிலான எந்த வேறுபாடும் கிடையாது. சுகாதாரமான சூழலில் இந்தகல்லூரி அமைந்துள்ளது. என் அறையைப் பாருங்கள் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், பல்வேறு மதத்தினரின் கடவுள் படங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு இந்த கல்லூரிக்கு முதல்வராக அமர்த்தப்பட்டேன். இங்குள்ள பின்தங்கிய பகுதி மாணவ மாணவியர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும், மனிதநேயம், சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

இந்த கல்லூரி உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்டாலும், இப்போது அவரின் சகோதரர் மகேந்திர சிங் பிஸ்த் மூலம் நிர்வாகம்செய்யப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் எந்த அடிப்படையிலும் வேற்றுமை என்பது கிடையாது என்பதுதான் சிறப்பாகும்” எனத் தெரிவித்தார்.

இந்த கல்லூரியில் நீண்டகாலமாக வரலாற்று துறை பேராசிரியராக பணிபுரிந்து வரும் முகேஷ் தியாகி கூறுகையில், “ உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தின் சிந்தனைகள், கொள்கைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஆனால், எதையும், இந்த கல்லூரிக்குள் திணிக்க அவர் ஒருபோதும் முயற்சித்தது இல்லை. இந்த கல்லூரியின் நோக்கம் சிறந்தகல்வி கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்.

இந்த கல்லூரியில் சமூக ரீதியான மோதல்கள் இல்லை, இனம், மதம், சாதி, நிற அடிப்படையிலான பாகுபாடு எப்போதும் இல்லாத ஒரு கல்லூரியாகும்” எனத் தெரிவித்தார்.

இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி சரிதா குமாரி கூறுகையில், “ பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இந்த கல்வி பெரிதும் உதவி செய்கிறது” என்றார்.