Here are details of Ivanka Trumps Hyderabad visit Manushi Chhillar Sonam Kapoor will also attend GES Summit

ஐதராபாத்தில் இன்று தொடங்கும் உலக தொழில்முனைவோர்கள் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகள் இவாங்கா டிரம்ப் வருகிறார்.

இவரின் வருகைக்காக ஐதாராபாத் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, நகரில் உள்ள பிச்சைக்காரர்கள் அனைவரும் அகற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஐதராபாதில் இன்று தொடங்கி வரும் 30-ந்தேதி வரை உலக தொழில்முனைவோர்கள் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்துகின்றன.

இதில் 150 நாடுகளில் இருந்து, 1500 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் அமெரிக்காவில் இருந்து அதிபர் டிரம்பின் மகளும், வெள்ளை மாளிகை ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் தலைமையில் குழு வருகிறது. இந்த 150 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்க ஐதராபாத் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 சாலைகள் அனைத்தும் செப்பணிடப்பட்டு, குண்டும் குழி நீக்கப்பட்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளன, ஐதராபாத்தில் சுற்றித்திரிந்த 200க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் ஆசிரமங்களுக்கு அனுப்பப்பட்டு பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றப்பட்டுள்ளது.

 இந்த தொழில்முனைவோர் மாநாடு, 35 ஏக்கர் பரப்பரளவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்திலும், ஐதராபாத் சர்வதேச வர்த்தக மையத்திலும் நடக்க உள்ளது. இந்த இரு மையங்களையும் தயார் செய்யப்பட்டு தீவிர பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் வருகையின்போது பாதுகாப்பை தீவிரப்படுத்த, 10 ஆயிரம் கூடுதல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு செயல் இழப்புபடையினர், மோப்ப நாய்கள், தீவிரவாத தடுப்புபடையினர் ஐதராபாத் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

விமானநிலையத்தில் இருந்து தான் தாங்கும் இடம் வரை இவாங்கா டிரம்ப் குண்டு துளைக்காத காரில் பயணம் செய்கிறார். இவரின் பாதுகாப்பை அமெரிக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஐதாராபாத்துக்கு வரும் இவாங்கா டிரம்பை பிரதமர் மோடி வரவேற்கிறார். அதன்பின் இவாங்கா டிரம்ப் தலைமையில் வரும் அமெரிக்க குழுவினர் நகரில் உள்ள ஆடம்பர சொகுசு ஓட்டலான பலாக்னுமா பேலஸில் தங்குகின்றனர்.

ஐதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் உள்ள திறந்த வெளிச்சந்தையை இவாங்கா டிரம்ப் பார்வையிடுகிறார்.

இந்த உலக தொழில்முனைவோர்கள் மாநாடு குறித்து இவாங்கா டிர்ம்ப் கூறுகையில், “ நிர்வாகத்தில் தொழில்முனைவு என்பது முக்கியமான அம்சமாகும். புத்தாகத்தையும், கண்டுபிடிப்பையும், தொழில்முனைவுத் திறமை ஆகிய பணி உருவாக்கம், பொருளாதார வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியமான கருவிகலாகும். இதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. 2014 முதல் 2016ம் ஆண்டுகளில் உலக அளவில் பெண்களிடையே தொழில்முனைவு திறமையை 10 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில், வர்த்தகத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்தும், இந்தியா-அமெரிக்கா இடையே வளர்ந்து வரும் நட்புறவு குறித்தும் இவாங்கா டிரம்ப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய டைனிங் ஹாலில் விருந்து

ஐதராபாத்தில் உள்ள தாஜ் பலாக்னுமா அரண்மனை ஓட்டலில் உலகின் மிகப்பெரிய டைனிங் ஹாலில் பிரதமர் மோடி, இவாங்கா டிரம்புக்கு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். இந்த அரண்மனை தோற்றத்தில் இருக்கும் இந்த ஒட்டலை ஐதாராபாத் நிஜாம்கள் நிர்வகிக்கின்றனர்.

இது தவிர மாநில முதல் சந்திரசேகர் ராவ், ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் தனியாக விருந்து அளிக்க இருக்கிறார். இந்த விருந்தில் பிரதமர் மோடி, இவாங்கா டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இந்த மாநாடுக்கு மட்டும் தெலங்கானா அரசு சார்பில் ரூ.8 கோடி செலவு செய்யப்படுகிறது.

மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

ஐதராபாத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைக்கிறார். நாளை முதல் வர்த்தக சேவை தொடங்குகிறது.

முதல் கட்டமாக 30 கி.மீதொலைவுக்கு மியாபூர் மற்றும் நகோலி இடையே தொடங்குகிறது. இந்த இரு ரெயில்நிலையங்களுக்கும் இடையே 24 நிறுத்தங்கள் உள்ளன. இன்று நண்பகல் 2.15 மணிக்கு மியாபூர் ரெயில்நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மியாபூர் முதல் குக்கட்பள்ளி வரை மெட்ரோ ரெயலில் பயணிக்கிறார்.