உலக சுகாதார அமைப்பு 194 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது. உலகளவில் பொதுச்சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்து போராட வழிகாட்டுவது என உலக மக்கள் அனைவருக்கும் பொதுச்சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, உறுதி செய்வதுதான் உலக சுகாதார அமைப்பின் பணி. 

உலகையே தற்போது மிரட்டிவரும் கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கைளை உலக சுகாதார அமைப்பு கொடுக்கவில்லை எனவும் கொரோனா விவகாரத்தில் அந்த அமைப்பு அலட்சியமாக இருந்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார். ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி தான் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. 

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் செயல்பாடுகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டுகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பில் 34 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக்குழுவின் தலைவராக இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவராக ஜப்பானை சேர்ந்த மருத்துவர் ஹிரோகி நகதானி இருந்துவந்த நிலையில், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. இந்நிலையில், இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹர்ஷ் வர்தன் தேர்வு செய்யப்பட்டதற்கான ஒப்பந்தத்தில் உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. 

மருத்துவரான ஹர்ஷ் வர்தன், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்தவர். 1993ம் ஆண்டு முதல்முறையாக டெல்லி சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக அப்போதே பதவிவகித்த ஹர்ஷ் வர்தன், 1998, 2003, 2008, 2013 ஆகிய டெல்லி சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.  2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பி ஆகி மத்திய அமைச்சராகவும் ஆனார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக, ஹர்ஷ்வர்தன் சிறப்பான பணிகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தான், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக இந்தியாவை சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஹர்ஷ்வர்தன், தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.