இது என்னது சுதந்திர தின செல்பி; எடுத்துக் குவிக்கும் மக்கள்.. ரெக்கார்டு பிரேக்!
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூவர்ணக் கொடியுடன் 4.3 மில்லியன் செல்ஃபிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ‘ ஹர் கர் திரங்கா’ பிரசாரத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதன் ஒரு பகுதியாக, சமூக ஊடக கணக்குகளில் உள்ள புரொஃபைல் பிக்சரில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.
இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பிரச்சாரம் நடைபெறும். இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூவர்ணக் கொடியுடன் 43,644,013 (4.3 மில்லியன்) செல்ஃபிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் ஹர் கர் திரிங்கா இணையதளத்தின் முகப்பு பக்கம், செல்ஃபி புகைப்படங்களை பதிவேற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பயனர் போர்ட்டலைப் பார்வையிடும்போது, அவருக்கு இரண்டு தேர்வுகள் இருக்கும்: கொடி அல்லது டிஜிட்டல் திரங்காவுடன் செல்ஃபியை பதிவிடலாம். மேலும் அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இந்தியக் கொடியை வைத்திருக்கும் புகைப்படங்களைப் பார்க்கலாம்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறும். ஹர் கர் திரங்கா பிரச்சாரத்துடன், பிரிவினை நாளில் (ஆகஸ்ட் 14) மவுன ஊர்வலங்கள் நடத்தப்படும், இந்தியப் பிரிவினையின் அவலங்களை நினைவுகூரும் வகையிலும் அந்தக் கால வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த மவுன ஊர்வலம் நடைபெறும்.
இதனிடையே டெல்லியின் புகழ்பெற்ற செங்கோட்டையில் பிரதமர் மோடி நாளை தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றுவார். இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கிடையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி போலீசார் தேசிய தலைநகர் முழுவதும் சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.