நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். கைகளை சுத்தமாக வைத்து கொண்டால் கொரோனா வைரஸ் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என பொதுமக்களுக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தினர்.

இதனையடுத்து பொதுமக்கள் கைகளை கிருமி நீக்கம் செய்யும் ஹேண்ட் வாஷ் திரவங்கள் உள்ளிட்ட சுத்திகரிப்பான் பொருட்களை வாங்கி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சில பகுதிகளில் ஹேண்ட் வாஷ் திரவங்கள் போதிய அளவில் கடைகளில் கிடைக்கவில்லை என்பதால் மக்கள் ஆன்லைனில் வாங்கி வருகின்றனர். ஆனால் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைனில் வர்த்தக தளங்களில் சில விற்பனையாளர்கள் அந்த பொருட்களின் அதிகபட்ச சில்லரை விலையை சுமார் 16 மடங்கு அதிகமாக குறிப்பிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக தங்களது டிவிட்டரில் புகார் தெரிவித்துள்ளனர். ஹிமான்ஷூ குமார் என்பவர் தனது டிவிட்டரில், நிறுவனங்கள் 30 மில்லி ஹேண்ட் சுத்தகரிப்பு திரவத்தை ரூ.999க்கு மட்டுமே விற்பதன் மூலம் மக்களுக்கு உதவ கடுமையாக உழைத்து வருகின்றன. மேலும் ஒரு ரூபாய் தள்ளுபடி இருப்பதை மனதில் கொள்ளுங்கள். அதிகபட்ச சில்லரை விலையை காட்டிலும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு தயவு செய்து ஏதாவது செய்யுங்கள் பிளிப்கார்ட் என பதிவு செய்து இருந்தார். இது தொடர்பாக ஹிமாலயா மருந்து நிறுவனம் டிவிட்டரில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.