தமிழக மீனவர் நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுடன், குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆலோசனை நடத்தி, நம்பிக்கையான நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என இலங்கை அதிபரும் தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க நேற்று முன் தினம் சென்று இருந்தனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்ததுடன் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர். 

இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற  பிரிட்ஜோ (வயது 21) என்ற மீனவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து இருந்தது.

இதே போல்கிளிண்டன் என்ற மீனவர் குண்டுக்காயம் அடைந்தார். இந்த சம்பவத்தால் ராமேசுவரத்தில்கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது, கொலை செய்யப்பட்ட மீனவர் உடலை வாங்க மறுத்து மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இந்தியப் பெருங்கடல் நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி சென்று இருந்தார்.

அந்த மாநாட்டில் பங்கேற்க வந்து இருந்த இலங்கை அதிபர் மைத்திரிபாலசிறிசேனாவிடம், தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அன்சாரி ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது குறித்து விமானத்தில் ஹமீது அன்சாரியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில், “ இந்த மாநாட்டின் இடைவெளியில், இலங்கை அதிபர் சிறிசேனாவுடன், இந்திய மீனவர்  இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக பேச்சு நடத்தினேன்.

ஆனால், அவரோ, இந்த செய்தி குறித்து அறிந்ததும், இலங்கை கடற்படை தலைவரிடம் கேட்டு அறிந்தேன். ஆனால், இலங்கை கடற்படையினர்யாரும் இந்த தாக்குதலை நடத்தவில்லை எனத் தெரிவித்தார். இருப்பினும் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என உறுதியளித்தார்'' எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே அதிபர் சிறிசேனாவிடம் தனிப்பட்ட முறையில் பேசிய ஹமீது அன்சாரி, நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் வகையில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கு அதிபர் சிறிசேனா தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.