ஆண்டின் முழு பட்ஜெட் ரெடி; நிதித்துறை ஊழியர்களுக்கு அல்வா கொடுத்த நிர்மலா சீதாராமன்
ஆண்டின் முழு நிதிநிலை அறிக்கை வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் ஆவணங்கள் அச்சாவதற்கு முந்தைய சம்பிரதாயமான அல்வா கிண்டும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் முழு நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் 2023 - 24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிநிலையில் இடம்பெறும் அனைத்து அம்சங்களும் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் முக்கிய அதிகாரிகளின் முன்னிலையில் முக்கிய அம்சங்கள் றிக்கையில் அச்சிடப்படும்.
மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர்
அவ்வாறு முக்கிய அம்சங்கள் அச்சிடப்படும் நேரத்தில் நிதித்துறை அதிகாரிகள் அனைவரும் நிதித்துறை அலுவலகத்திலேயே தங்கியிருப்பர். அதன்படி நிதிநிலை அறிக்கை அச்சாவதற்கு முன்னர் அல்வா கிண்டும் நடைமுறை பாரம்பரிய நிகழ்வாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிதித்துறை அலுவலகத்தில் இன்று அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மத்திய நிதியமசை்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அல்வாவை நிதித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வழங்கியதைத் தொடர்ந்து அதிகாரிகள் யாரும் நிதிநிலை அறிக்கை தாக்கலாகும் வரை வீட்டிற்கு செல்ல முடியாது. நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை ரகசியமாக வைத்திருக்கும் பொருட்டு இதுபோன்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.