குருவாயூர் கோயிலில் தான் செய்த செயலுக்காக பிக்பாஸ் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர் மன்னிப்பு கேட்டார். கோயிலில் பரிகார பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Jasmine Jaffer Guruvayur Temple Controversy: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் உலகப்புகழ் பெற்ற குருவாயூரப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த கோயிலில் பாரம்பரியமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலின் கருவறைக்குள் நுழைய அனுமதி இல்லை.

பாரம்பரியமிக்க குருவாயூர் கோயில்

இதேபோல் குருவாயூர் கோயிலுக்குள் ஆண்கள் வேட்டியும், பெண்கள் சேலை அல்லது சல்வார்-கமீஸ் போன்ற பாரம்பரிய ஆடைகள் மட்டுமே அணிந்து செல்ல முடியும். ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற நவீன ஆடைகளை அணிந்து கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை. இப்படி பாரம்பரியமிக்க குருவாயூர் கோயிலில் பிக்பாஸ் பெண் பிரபலம் ஒருவர் செய்த காரியம் தான் இப்போது பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிக் பாஸ் போட்டியாளரும், சமூக ஊடக பிரபலபமுமான ஜாஸ்மின் ஜாஃபர் என்பவர் கோயிலின் புனிதமான குளத்தில் (ருத்ரதீர்த்தம்) கால்களை கழுவி ரீல்ஸ் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பர்வி வருகிறது.

பிக்பாஸ் பெண் பிரபலம் ரீல்ஸ்

ஜாஸ்மின் ஜாஃபர் புனிதமான குளத்தில் கால்களை கழுவிய வீடியோவை தன்னுடைய சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார். ருத்ரதீர்த்தம் என அழைக்கப்படும் இந்த குளம் கோயில் திருவிழாக்களின்போது இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் "ஆராட்டு" சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு புனிதமான இடமாகும். இப்படிப்பட்ட புனிதமான குளத்தில் ரீல்ஸ் மோகத்தில் பிக்பாஸ் பிரபலம் செய்த செயல் கோயில் நிர்வாகிகளிடமும், பக்தர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜாஸ்மின் ஜாஃபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

மன்னிப்பு கேட்ட ஜாஸ்மின் ஜாஃபர்

கோயிலின் புனிதத்தை களங்கப்படுத்திய ஜாஸ்மின் ஜாஃபர் மீது குருவாயூர் தேவசம் போர்டு போலீசில் புகார் கொடுத்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், ஜாஸ்மின் ஜாஃபர் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டார். ''கோயிலின் விதிமுறைகள் எனக்கு தெரியாது. யார் மனதையும் காயப்படுத்தவோ, சர்ச்சையை ஏற்படுத்தவோ இதை நான் செய்யவில்லை. இது தெரியாமல் நிகழ்ந்த தவறு'' என்று கூறிய ஜாஸ்மின் ஜாஃபர் சமூகவலைத்தளங்களில் இருந்து அந்த வீடியோவை உடனடியாக நீக்கினார்.

கோயிலில் பரிகார பூஜை செய்ய முடிவு

ஜாஸ்மின் ஜாஃபர் செயலால் புனிதம் கெட்டு விட்டதாகக் கூறி கோயிலில் பரிகார பூஜைகள் செய்ய கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இன்று முதல் கோயில் குளத்தில் புண்யாஹம் (சுத்திகரிப்பு சடங்கு) நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குருவாயூர் கோயில் முழுமையும் சுத்தப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் ஒவ்வொரு மத வழிபாட்டுத் தலங்களுக்கும் ஒவ்வொரு பாரம்பரிய விதிமுறைகள், சடங்குகள் உள்ளன. அவற்றை மதித்து நடந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.