பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். சிறை சுவரை பார்த்து அவர் கதறுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

சிறை தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன், 700 ஏக்கரில் அமைந்துள்ள ஆசிரமத்தில் தான் குர்மீத் தங்கி இருந்தார். அவரிடம், 170 கார்கள் இருந்தன. ஆடம்பரமான படுக்கை அறையில் உறங்கியே பழக்கமானவர்.

ஆனால், சிறையில், அவருக்கு எட்டுக்கு எட்டு அளவு உள்ள சிறிய அறை தான் தரப்பட்டுள்ளது. இத்துடன், 40 ரூபாய் சம்பளத்தில் தோட்ட வேலை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சிறைக்குள் உதவி செய்ய தனது வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இசானை உள்ளே அனுமதிக்க வேண்டும் என குர்மீத் கோரிக்கை விடுத்தார். அதை சிறை அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

அதற்கு பதில், இரண்டு தண்டனை கைதிகளை அவருக்கு உதவி செய்ய அனுப்பி உள்ளனர். சிறையில் உள்ள கேண்டீனில் இருந்து மினரல் பாட்டில் குடிநீர் தான் வேண்டும் என குர்மீத் அடம் பிடிக்கிறார்.

முதல் இரண்டு நாள் சிறை உணவு குர்மீத்திற்கு பிடிக்கவில்லை. தற்போது நிலைமையை உணர்ந்துள்ளார். சிறை அறையில் சுவற்றை பார்த்து கதறுகிறார்; புலம்புகிறார்.

தினமும் அவர் மற்ற கைதிகளை போல, காலை மற்றும் மாலை நேரத்தில் அதிகாரிகள் முன் ஆஜராகிறார் என சிறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.