குஜராத் பலன்பூரில், தனது ஸ்கூட்டரில் ஏற்பட்ட பழுது குறித்து பலமுறை புகார் அளித்தும் நிறுவனம் அலட்சியம் செய்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஒருவர், ஷோரூமுக்கு வெளியே தனது ஸ்கூட்டருக்கு தீ வைத்தார்.
குஜராத்தின் பலன்பூரில் அடிக்கடி பழுதாகி நின்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதன் உரிமையாளர், அதை வாங்கிய ஷோரூமுக்கு முன்பே தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கூட்டரில் ஏற்பட்ட பழுது குறித்து பலமுறை புகார் அளித்தும் நிறுவனம் அலட்சியம் செய்ததால் ஆத்திரமடைந்து இவ்வாறு செய்த்தாக அவர் கூறியுள்ளார். சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டர் சில நிமிடங்களில் எரிந்து நாசமான வீடியோ வைரலாகியுள்ளது.
பாதி வழியில் நின்றி ஸ்கூட்டர்
சம்பவம் குறித்து வெளியான தகவல்களின்படி, அந்த நபர் தனது ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றபோது, ஸ்கூட்டரின் ஸ்டீயரிங் மற்றும் டயரின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் தானும் தனது குடும்பத்தினரும் ஆபத்தில் சிக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த இயந்திரக் கோளாறு குறித்து தான் பலமுறை நிறுவனத்திடம் புகார் அளித்தும், திருப்திகரமான பதில் கிடைக்காததால், "தனக்குப் பயன்படாத இந்த ஸ்கூட்டர் இனிமேல் தேவையில்லை" என்று கூறி அதை எரித்துவிட முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
ஸ்கூட்டரை எரித்த வீடியோ வைரல்
சம்பந்தப்பட்ட வீடியோவில், அந்த நபர் ஸ்கூட்டர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. சில நிமிடங்களில் வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்து, முற்றிலும் நாசமாகிவிட்டது. இந்தச் சம்பவம் ஷோரூமுக்கு வெளியே பெரும் கூட்டத்தைக் கூட்டிவிட்டது.
பின்னர் வாடிக்கையாளர் இதுகுறித்து விளக்கமளிக்கையில், தான் தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகனுடன் பட்டாசு வாங்க பலன்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஸ்டீயரிங் திடீரென தனியாக வந்ததாகக் கூறினார். அதிர்ஷ்டவசமாக, தாங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லவில்லை என்றும், மெதுவான வேகத்தில் ஓட்டிச் சென்றதால்தான் ஒரு பெரிய விபத்து தடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
