குஜராத் மாநிலத்தில் வெளிவரும் ஒரு மாலை நாளேடு, ஏப்ரல் முதல் தேதியன்று தனது வாசகர்களை ஏமாற்ற ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை அரசு செல்லாததாக அறிவித்துவிட்டது என விளையாட்டாக வெளியிட்ட செய்தி, இன்று உண்மையாக மாறியுள்ளது.

குஜராத் மாநிலத்தில், ஏப்ரல் முதல் தேதியான முட்டாள்கள் தினத்தன்று, வாசகர்களை ஏமாற்ற பத்திரிகைகள் ஏதாவது வித்தியாசமான செய்தியை வெளியிடுவார்கள். மறு நாள் தாங்கள் வெளியிட்ட பொய்யான செய்தி எது எனக்கூறி , விளக்கம் அளிப்பார்கள். அது அந்த மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது.

அதுபோல், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று, ராஜ்கோட் நகரில் உள்ள ‘அகிலா’ எனும் மாலைநேர நாளேடு, மக்களை ஏமாற்ற மத்திய அரசு ரூ.1000, ரூ.500 நோட்டை செல்லாது என அறிவித்துவிட்டது எனச் செய்தி வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பானது. அதன்பின், மறுநாள் அந்த செய்தி பொய் என்றும், வாசகர்களை முட்டாளாக்க வெளியான செய்தி என விளக்கம் அளித்தது.

ஆனால், அன்று வெளியிட்ட செய்தி, கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடியின் அறிவிப்பால் உண்மையாகியுள்ளது.

அது குறித்து அந்த நாளேட்டின் ஆசிரியர் கீர்த்தி கானத்ரா கூறுகையில், “ எங்கள் வாசகர்களை முட்டாளக்க கடந்த ஏப்ரல் முதல்தேதியன்று, மத்தியஅரசு ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என அறிவித்துவிட்டது என செய்தி வெளியிட்டோம். ஆனால், நாங்கள் எதேச்சையாக வெளியிட்ட செய்தி, 6 மாதங்களுக்கு பின் கடந்த 8-ந்தேதி உண்மையாகியுள்ளது'' எனத் தெரிவித்தார்.

தற்போது மத்திய அரசின் அறிவிப்பையடுத்து, எப்படி இந்த செய்தியை முன்கூட்டியை வெளியிட்டீர்கள், உங்களுக்கு எப்படி கிடைத்தது என வாசகர்களும், பொதுமக்களும் அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு தொலைபேசி மூலமும், மின்அஞ்சல்கள் மூலம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கின்றனர்.