காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் பாஜகவில் இணையும் நடவடிக்கையாக தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த தகவலை குஜராத் சபாநாயகர் ராமன்லால் வோரா தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் கடந்த செவ்வாயன்று நடைபெற்றது. இதில் பாஜக தரப்பில் அதன் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் தரப்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல் நிறுத்தப்பட்டார். அவரை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

தேர்தலின்போது, காங்கிரசில் மொத்தம் உள்ள 57 பேரில் 8 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர்.

அவர்களில் 2 பேரின் வாக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் நீண்ட நேர பரபரப்புக்கு பின்னர் அகமது படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு செல்லாது என்றும், அகமது படேல் வெற்றி பெற்றதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் குஜராத் முதல் அமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, பாஜகவுக்கு வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை கட்சியில் இருந்து நீக்கி குஜராத் மாநில பொறுப்பாளரான அசோக் கெலாட் நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் சங்கரசிங் வகேலாவை தவிர்த்து அவரது மகன் மகேந்திர சிங் வகேலா, செல்லாத ஒட்டுகள் போட்ட ராகவ்ஜி படேல், போலாபாய் கோயல் மற்றும் அமித் சவுத்ரி, சி.கே. ராவுல்ஜி, தர்மேந்திர சிங் ஜடேஜா, கரம்சிங் படேல் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுதொடர்பான கடிதத்தை நேற்று முன்தினம் இரவு சபாநாயகர் ராமன்லால் வோராவை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். இந்த தகவலை சபாநாயகர் வோரா நேற்று செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மகேந்திர சிங் வகேலா கூறும்போது, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான அனைத்து நிபந்தனைகளையும் நாங்கள் பூர்த்தி செய்து விட்டோம். நாங்கள் பாஜகவில் இணைய உள்ளோம்.

இருப்பினும் எனது தந்தை சரங்கரசிங் வகேலாவுக்கு பாஜகவில் இணையும் எண்ணம் இல்லை என்றார். குஜராத் அரசியலில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் திருப்பங்களால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.