எங்கள் வீட்டில் சாப்பிட வாருங்கள் என அழைத்த ஆட்டோ ஓட்டுநர்; உடனே ஒப்புக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!!
குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதை முன்னிட்டு, அகமதாபாத்தில் ஆட்டோ டிரைவர்களிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உரையாடினார்.
அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுனர் இன்று இரவு எட்டு மணிக்கு தனது வீட்டுக்கு சாப்பிட வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாவாலுக்கு அழைப்பு விடுத்தார். இதை உடனடியாக அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்.
உரையாடலின்போது அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் லால்தனி, ''நான் உங்களின் மிகப்பெரிய ரசிகர். பஞ்சாபில் நீங்கள் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் வீட்டில் உணவு அருந்தியதை பார்த்து இருக்கிறேன். அதேபோல எனது வீட்டுக்கும் சாப்பிடுவதற்கு வருவீர்களா? என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள் இவரது அழைப்பை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் லால்தனி கேட்டுக் கொண்டு இருக்கும்போதே கொஞ்சமும் யோசிக்காமல், தயங்காமல் பதிலளித்த அரவிந்த கெஜ்ரிவால், ''நான் நிச்சயமாக உங்களது வீட்டுக்கு வருகிறேன்'' என்றார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ''பஞ்சாபில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அதேபோல், குஜராத்திலும் என்னை ஆட்டோ ஓட்டுநர்கள் விரும்புகின்றனர். நான் உங்களது வீட்டுக்கு இன்று இரவே சாப்பிட வரலாமா? என்னுடன் கட்சியைச் சேர்ந்த மேலும் இருவர் வருவார்கள்.
''நான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு வந்து என்னை நீங்கள் உங்களது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு உங்களது வீட்டுக்கு செல்ல வேண்டும்'' என்று கேட்க, உடனடியாக அந்த ஆட்டோ ஓட்டுநரும், 'வருகிறேன்' என்று பதில் அளித்தார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். ஆட்டோ ஓட்டுநர்களை இன்று காலை சந்தித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பின்னர் துப்புரவு தொழிலாளர்களையும் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்பது அரவிந்த கெஜ்ரிவாலின் குறிக்கோளாக இருக்கிறது. ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், அடித்தட்டு மக்களைக் கவருவதில் கவனம் செலுத்தி வருகிறார். குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் அளிப்பது, பெண்கள் மற்றும் வேலை இல்லாதவர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பது, தரமான சுகாதார சிகிச்சை அளிப்பது, இலவச கல்வி அளிப்பது போன்ற வாக்குறுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்துள்ளார்.