மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் 30 பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி.) குறைத்தும், நடுத்தர, எஸ்.யு.வி. மற்றும் ஆடம்பர கார்களுக்கான கூடுதல் வரியை உயர்த்தியும் ஜி.எஸ்.டி. கவுன்சில் நேற்று முடிவு செய்தது.

அதேசமயம், சிறிய ரக பெட்ரோல், டீசல் கார்களுக்கு கூடுதல் வரி ஏதும் விதிக்கப்படவில்லை. சமையல் அறையில் பயன்படுத்தப்படும் கியாஸ் லைட்டர், இட்லி, தோசை மாவு, மழைக் கோட்டு உள்ளிட்ட 30 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு ஒரே சீரான மறைமுக வரியான சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வரி அமல்படுத்தியதில் இருந்து பல்வேறுதரப்பினர் வரி உயர்வு அதிகமாக இருப்பதாக புகார் தெரிவித்து வந்தனர். அதன்பின். ஜி.எஸ்.டி. வரி வீதம் குறித்து மாநில நிதி அமைச்சர்களைக்கொண்ட ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடி அவ்வப்போது வரிவீதங்களை மாற்றி அமைத்து வருகிறது.

அதுபோல், ஐதராபாத் நகரில் நேற்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவர் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்பபடி, சாமானிய மக்கள் பயன்படுத்தும் 30 வகையான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காயவைக்கப்பட்ட சமையலுக்கு பயன்படும் புளி, கடுகுப்பொடி, ஊதுபத்தி, பிளாஸ்டிக் ரெயின்கோட், அரிசி அரவை மில்லில் பயன்படுத்தும் உருளை, கம்ப்யூட்டர் மானிட்டர்(திரை), சமையலில் கியாஸ் அடுப்பு லைட்டர், துடைப்பம், பிரஷ், இட்லி,தோசை மாவு உள்பட 30 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. 

நடுத்தரமான கார்களுக்கு கூடுதலாக 2 சதவீத வரியும், பெரிய கார்களுக்கு 5 சதவீத வரியும், எஸ்.யு.வி. கார்களுக்கு 7 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 1200 சி.சி. திறன் கொண்ட சிறிய ரக டீசல், பெட்ரோல் கார்களுக்கு கூடுதலாக வரி விதிக்கப்படவில்லை. இந்த கூடுதல் வரி நடைமுறைப்படுத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

சிறிய ரக கார்களுக்கு வரி கூடுதலாக விதிக்கப்படாததால், முதல் முறையாக கார் வாங்குபவர்கள், நடுத்தரமக்கள் அதிகமாக இனி பயன்பெறுவார்கள்.

மேலும், ஜி.எஸ்.டி. வரி செலுத்தும் வர்த்தகர்கள் முதல்மாத ரிட்டனை செலுத்தும் காலம் அக்டோபர் 10ந்தேதி வரை காலக்கெடுதரப்பட்டுள்ளது. மேலும், முதல் 3 மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. ரிட்டன் தாக்கல் செய்யும் காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2-வது ஜி.எஸ்.டி. ரிட்டன் தாக்கல் செய்ய அக்டோபர் 31-ந்தேதியும், 3-வதுரிட்டன் தாக்கல் செய்ய நவம்பர் 10-ந்தேதி வரையிலும்அவகாசம் தரப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி செலுத்தும் 70 சதவீத வர்த்தகர்களால், இலக்கைக் காட்டிலும் அதிகமாக ரூ.4 ஆயிரம் கோடி அதிகமாக ரூ.95 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.