GST affects egg price determination
நாடுமுழுவதும் நேற்று முதல் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்துள்ளநிலையில், நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படும் முட்டை விலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு(என்.இ.சி.சி.) மிகப் பெரிய மாற்றம் கொண்டுவந்துள்ளது.
வாரத்துக்கு 3 முறை
அதன்படி, நாள்தோறும் மாலை முட்டை விலை மாற்றி அமைக்கப்படுதற்கு பதிலாக வாரத்துக்கு 3 முறை மாற்றி அமைக்கப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு பின், முட்டை விலையை நிர்ணயம் செய்வது குறித்து கடந்த வியாழக்கிழமை என்.இ.சி.சி. அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
திங்கள், வியாழன், சனி
இது குறித்து கடந்த என்.இ.சி.சி. அமைப்பு வௌியிட்ட அறிக்கையில், “ ஜூலை 1-ந்தேதிக்கு பின் முட்டை விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படாது. அதற்கு மாறாக, வாரத்துக்கு 3 முறை மாற்றி அமைக்கப்படும். அதாவது திங்கள், வியாழன்,சனிக்கிழமையில் விலை மாற்றி அமைக்கப்படும். திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு விலை மாற்றப்படும், அந்த விலை செவ்வாய், புதன்கிழமை வரை தொடரும்.
பின் வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படும் விலை வௌ்ளி, சனிக்கிழமை வரையிலும், சனிக்கிழமை மாலை மாற்றப்படும் விலை திங்கள் வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டு பாரம்பரியம்
முட்டைகளின் தேவை, சப்ளையை பொருத்து நாள்தோறும் அதன் விலையை மாற்றி அமைப்பதுதான் கடந்த 40 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் முறையாகும். ஆனால், ஜி.எஸ்.டி. வரியால் இந்த பாரம்பரியம் மாற்றப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறைக்குள் வரும்
மேலும், ஜி.எஸ்.டி. வரிக்குபின், முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து, முட்டை வியாபாரிகளுக்கு அனுப்பப்படும் போதும், கண்டிப்பாக பில் அனுப்பப்பட உள்ளது. இந்த பில்லை, வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு வைக்க பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த புதிய முறை நாமக்கலில், முட்டை வர்த்தகத்தை எதிர்காலத்தில் ஒழுங்குபடுத்தும்.
