திருமண வரவேற்பில் பங்கேற்ற புது மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவரை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

ஆந்திராவின் பத்திகொண்டா மண்டலம், மர்ரிமானதாண்டாவை சேர்ந்த ஒரு வாலிபர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு வேல்தூர்த்தி மண்டலம், எல்.தாண்டாவை சேர்ந்த இளம் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக வாலிபர் கடந்த 10ம் தேதி ஐதராபாத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். 

நேற்று முன்தினம் காலை வாலிபருக்கும், இளம்பெண்ணிற்கும் எல்.தாண்டா கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு அதே கிராமத்தில் திருமண  வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது புதுமாப்பிள்ளை திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் சந்தேகத்தின்பேரில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கர்னூல் கொரோனா வார்டிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், புதுப்பெண் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருமணத்தில் பங்கேற்ற 70 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்கு சளி  மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.