தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்குத் தடை: மத்திய அரசு அறிவிப்பு
தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.
"இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம், ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ள பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றில் இந்த அமைப்புக்குத் தொடர்பு இருக்கிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசு பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும் எந்தஒரு தனிமனிதரோ அமைப்போ தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக அந்த முயற்சி முறியடிக்கப்படும் எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
'தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர்' அமைப்பு 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட சையத் அலி ஷா கிலானி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. காஷ்மீரி ஜிகாதி குழுக்களின் தலைவராகவும் கருதப்படும் இவர் ஜமாத் இ இஸ்லாமி காஷ்மீர் அமைப்பில் இருந்து விலகி இந்த அமைப்பைத் தொடங்கினார்.
சையத் அலி ஷா கிலானி இறந்த பின்பு, மசரத் ஆலம் பட் அந்த அமைப்பின் தலைவரானார். இவரும் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானிய ஆதரவாகவும் நிலைப்பாடு கொண்டவர். இவர் கைது செய்யப்பட்டு, தறபோது சிறையில் இருக்கிறார்.