சென்னை விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்புடைய 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்க கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து  சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த குத்தூஸ் (30), உமர் அப்துல்லா (36), ஆந்திராவைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (41) ஆகிய 3 பேரை சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

சோதனையின்போது, நூதன முறையில் அவர்கள் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சூட்கேஷ் கைப்பிடி, ஷேவிங் ரேசர், க்ரீம் ஆகியவற்றுக்குள் தங்கம் மறைத்து வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 600 கிராம் கொண்டது. இது ரூ.18 லட்சம் மதிப்புள்ளது என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.