நவம்பர் மாதத்தில் மட்டும் நாட்டில் 66 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான கருப்புபணம் தங்கமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, அமலாக்கப்பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

6,200 கிலோ

இதில் குறிப்பாக சென்னையில் மட்டும் 6,200 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரபலமான நகைக்கடை ஒன்றில் மட்டும் நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் 200 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து நகைக் கடைகள் பக்கம் கவனத்தை அமலாக்கப்பிரிவு திருப்புகிறது.

கருப்புபணம்

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். பிரதமர் மோடி அறிவித்த சில மணி நேரங்களில் கருப்புபணம் பதுக்கியவர்கள், தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்ற தங்கத்தை வாங்கிக் குவித்தனர்.

தகவல் சேகரிப்பு

இது குறித்து அமலாக்கப்பிரிவு மற்றும் மத்திய கலால் வரித் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தங்கம் இறக்குமதி, தங்கம் விற்பனை குறித்து தகவல்களைச் சேகரித்தனர்.

 

சென்னையில் 7 டன் தங்கம்

இது குறித்து அமலாக்கப் பிரிவுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “ இதில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 66 ஆயிரம் கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  இதில் டெல்லியில் 25 ஆயிரம் கிலோ விற்பனை செய்யப்பட்டுள்ளது. குஜராத், ஆமதாபாத்தில் 15 ஆயிரம் கிலோ, ஐதராபாத்தில் 7,300 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 7 ஆயிரம் கிலோ, பெங்களூருவில் 6,200 கிலோ,கொல்கத்தாவில் 2,500 கிலோ, மும்பையில், 1,250 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது

இதில் டெல்லியில் உள்ள முன்னணி தங்கநகை விற்பனையாளர் மட்டும் நவம்பர் 8-ந்தேதி மற்றும் 9ந்தேதிகளில் 700 பேருக்கு, 45 கிலோ தங்க நகைகளை விற்பனை செய்துள்ளார். ஆனால், அதற்கு முந்தைய நாள் அதாவது நவம்பர் 7-ந்தேதி 820 கிராம் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

 

200 கிலோ நகைகள்

அதேபோல, சென்னையிலும், தமிழகத்தின் பல நகரங்களிலும் தங்கநகை கடை கிளைகள் வைத்துள்ள பிரபலமான கடை சென்னையில் மட்டும் நவம்பர் 8-ந்தேதி 200 கிலோ நகைகள் விற்பனை செய்தது. அதற்கு முந்தைய நாள் 40 கிலோ மட்டுமே விற்பனை செய்து இருந்தது.
 

இது போல் பலமாநிலங்களில்  தங்கநகைகளை நவம்பர் 8-ந்தேதி இரவு முதல் 9-ந்தேதி அதிகாலை முதல் விற்பனை செய்த நகைக்கடைகளின் விவரங்களை அமலாக்கப்பிரிவினர் சேகரித்துள்ளனர். விரைவில் அந்த நகைக்கடைகள், தங்கம் இறக்குமதியாளர்களுக்கு விரைவில் நோட்டீஸ் பறக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.