கோவா 1947ல் இந்தியாவுடன் விடுதலை அடையவில்லை. 1961 டிசம்பர் 19ல் போர்ச்சுகீசியர்களிடமிருந்து விடுதலை பெற்றது. ஆபரேஷன் விஜய் மூலம் இந்திய ராணுவம் கோவாவை மீட்டது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. கோவாவிலும் இந்த நாள் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், கோவாவின் உண்மையான சுதந்திர தினம் டிசம்பர் 19 ஆகும். இதை கோவா முக்தி தினம் என்று அழைக்கின்றனர். காரணம், இந்தியா சுதந்திரம் அடைந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகே கோவா விடுதலை பெற்றது.

போர்ச்சுகீசியர் ஆட்சி

இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. ஆனால், கோவா 1510 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர் ஆட்சியின் கீழ் இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு, போர்ச்சுகீசியர்கள் கோவாவை கைவிட மறுத்தனர். இதனால், இந்தியாவின் மற்ற பகுதிகள் சுதந்திரம் அடைந்தபோதும், கோவா தொடர்ந்து காலனித்துவ ஆட்சியில் இருந்தது.

கோவா விடுதலைப் போராட்டம்

19ஆம் நூற்றாண்டிலிருந்து கோவாவில் விடுதலைக் குரல் எழுந்தாலும், நாடு முழுவதும் நடந்த சுதந்திரப் போராட்டம் போல ஒருங்கிணைந்த இயக்கம் உருவாகவில்லை. பல ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, போர்ச்சுகீசியர் அதிகாரத்தை விட மறுத்ததால், அந்நாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, கோவாவை இந்தியாவில் இணைக்கும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்.

ஆபரேஷன் விஜய் – கோவா விடுதலை

1961 டிசம்பர் 18-ஆம் தேதி, இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை இணைந்து 'ஆபரேஷன் விஜய்' எனும் ராணுவ ராணுவம் நடவடிக்கையை தொடங்கின. அப்போது கோவாவில் சுமார் 3,300 போர்ச்சுகீசிய வீரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் விரைவில் சரணடைந்தனர். மாலை 6 மணிக்கு போர்ச்சுகீசியக் கொடி இறக்கப்பட்டு, வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.

கோவாவின் சுதந்திர நாள்

1961 டிசம்பர் 19 காலை, மேஜர் ஜெனரல் கந்தேத், கோவா செயலாளர் அலுவலகம் முன் இந்தியத் திரிவர்ணக் கொடியை ஏற்றினார். இந்த நடவடிக்கையில் 7 கடற்படை வீரர்கள் உட்பட பலர் உயிர்நீத்தனர். அவர்களின் நினைவாக, INS Gomantak-இல் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து டிசம்பர் 19, கோவா முக்தி தினம் எனக் கொண்டாடப்படுகிறது. இது கோவா மக்களுக்குப் பெருமைமிகு நாளாகும்.