கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

கோவா முதல்வராக இருந்து வரும் மனோகர் பாரிக்கர், முதலில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போதுதான், பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான 'ஆடியோ' ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால் ஊழல் விவகாரம் அம்பலம் ஆகும் என அச்சத்தில் பாஜக உள்ளதால் மனோகர் பாரிக்கர் உயிருக்கு ஆபத்து உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

அதில் ரபேல் ஆவணங்கள் வெளியாகி விடக்கூடாது என சிலர் விரும்புகின்றனர். அவர்களால் பாரிக்கர் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.