கோடிக்கணக்கான மக்களுக்கு கீதா பிரஸ் ஒரு கோயில்: பிரதமர் மோடி பேச்சு!
கீதா பிரஸ் பதிப்பகம் கோடிக்கணக்கான மக்களுக்கு கோயிலாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் இன்றும், நாளையும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, கீதா பிரஸ் நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “நூற்றாண்டு பழமையான கீதா பிரஸ் பதிப்பகம் வெறும் நிறுவனம் மட்டும் அல்ல; கோடிக்கணக்கான மக்களுக்கு கோயிலாக உள்ளது. இந்த நிறுவனம் மகாத்மா காந்தியுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கும் ஒரு உயிருள்ள நம்பிக்கை.” என்றார்.
கீதா பிரஸின் நூற்றாண்டு விழாவையொட்டி அதற்கு மகாத்மா காந்தி அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, ஒருகாலத்தில் மகாத்மா காந்தி கீதா பிரஸுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்தார். கல்யாண் பத்திரிகை மூலம் கீதா பதிப்பகத்துக்காக அவர் எழுதி வந்துள்ளார் என கூறினார்.
1923 ஆம் ஆண்டு கோரக்பூரில் நிறுவப்பட்ட பதிப்பகமான, கீதா பிரஸ் என்ற பதிப்பகம், மோடி தலைமையிலான நடுவர் குழுவால், 2021 ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி அமைதிப் பரிசுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 125ஆவது பிறந்தநாளான 1995ஆம் ஆண்டில் மாகாத்மா காந்தி அமைதி பரிசை மத்திய அரசு அறிவித்து வழங்கி வருகிறது.
மகாத்மா காந்தியால் வலியுறுத்தப்பட்ட கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த பரிசானது வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசானது 1 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், பட்டயமும் கொண்டது. இதற்குமுன் இந்தப் பரிசை நெல்சன் மண்டேலா, டெஸ்மாண்ட் டுட்டு உள்ளிட்ட 18 பேர் பெற்றுள்ளனர்.
கீதா பிரஸ் பதிப்பகத்தின் நிறுவனர் ஜெய்தயாள் கோயங்கா, அந்தப் பதிப்பகம் வெளியிடும் கல்யாண் என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர் பிரசாத் போதார் ஆகியோர் மகாத்மா காந்தியுடன் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
கீதா பதிப்பகம் விழாவை முடித்துக் கொண்டு, கோரக்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். முன்னதாக, கோரக்பூர் வந்தடைந்த அவரை, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர்.
இன்று காலை சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் சென்ற பிரதமர் மோடி, சுமார் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதில், ரூ.6,400 கோடி மதிப்பிலான ஐந்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் அடங்கும்.
2020 பேட்ச் மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
மேலும், 103 கிமீ ராய்ப்பூர்-காரியார் சாலை-ரயில் பாதையையும், கியோட்டி மற்றும் அந்தகர்ஹ்-யை இணைக்கும் புதிய 17 கிமீ ரயில் பாதையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன், ரூ.130 கோடிக்கு அதிகமான செலவில் கோர்பாவில் கட்டப்பட்டுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பாட்டில் ஆலையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ஆலை ஆண்டுக்கு 60,000 மெட்ரிக் டன் தயாரிக்கும் திறன் கொண்டது. அத்துடன், வீடியோ கன்ஃபரன்சிங் மூலம் அந்தகர்ஹ்-ராய்ப்பூர் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பயனாளிகளுக்கு 75 லட்சம் ஆயுஷ்மான் கார்டுகளையும் விநியோகம் செய்தார்.
சத்தீஸ்கரில் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தனது திருப்தியை வெளிப்படுத்திய பிரதமர், ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை மாநிலம் கண்டு வருவதாகவும், இது உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை பெரிதும் மேம்படுத்தும் என்றும் கூறினார். இந்த முயற்சிகள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மாநிலத்தில் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் போதுமான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக சத்தீஸ்கருக்கு மத்திய அரசு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார்.