கொரொனா அலையின்போது உரிமம் இல்லாமல் மருந்துகளைப் பதுக்கி விநியோகித்ததாக இந்திய அணி பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மீது தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் உள்ளார். இந்த நிலையில் கொரொனா அலையின்போது உரிமம் இல்லாமல் மருந்துகளைப் பதுக்கி விநியோகித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கௌதம் கம்பீர், அவரது தொண்டு நிறுவனம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட கிரிமினல் புகாரை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.

கொரொனா மருந்துகளை விநியோகித்ததாக வழக்கு

டெல்லி அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை பதிவுசெய்த புகாரையும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 26, 2021 அன்று அனுப்பப்பட்ட சம்மனையும் ரத்து செய்யக் கோரி, கௌதம் கம்பீர் அறக்கட்டளை, கௌதம் கம்பீர், அவரது தாய் சீமா கம்பீர் மற்றும் அவரது மனைவி நடாஷா கம்பீர் ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். கொரோனாவின் இரண்டாவது அலையின் போது, முறையான உரிமம் இல்லாமல் கொரொனா மருந்துகளை அறக்கட்டளை கொள்முதல் செய்து விநியோகித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மருத்துவ முகாம் நடத்தியதாக விளக்கம்

கொரொனா நெருக்கடியின் உச்சக்கட்டத்தில், ஏப்ரல் 22, 2021 முதல் மே 7, 2021 வரை மருத்துவ முகாமை நடத்தியதாக கம்பீர் தரப்பு தெளிவுபடுத்தியது. அவர்கள் தாகல் செய்த மனுவில் மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு தன்னார்வ மருத்துவரின் மேற்பார்வையில் இந்த முகாம் நடத்தப்பட்டது. மேலும், டெல்லியில் உள்ள ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த மக்களுக்கு மருந்துகளும், உணவும் இலவசமாக வழங்கப்பட்டன.

எந்த குற்றச்சாட்டும் இல்லை

மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜூலை 8, 2021 அன்று தாக்கல் செய்த புகாரில்கூட, இந்த முகாம் ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் செயல்பட்டதை ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர்கள் மருந்துகள் அல்லது ஆக்ஸிஜனை பதுக்கியதாகவோ அல்லது இருப்பு வைத்திருந்ததாகவோ எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

அடிப்படையில் தவறான வழக்கு

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹத்ராய், வழக்கறிஞர் சித்தார்த் அரோராவுடன் இணைந்து, மாஜிஸ்திரேட் "தவறுதலாக" புகாரை ஏற்றுக்கொண்டு, எந்த சட்ட அடிப்படையும் இல்லாமல் சம்மன் அனுப்பியதாக வாதிட்டார். மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 18(c) மற்றும் 19(3)-இன் படி, அறக்கட்டளை மேற்கொண்ட தொண்டுப் பணி தடைசெய்யப்பட்ட வகைகளின் கீழ் வராது என்பதை தெளிவாகக் குறிப்பிடுவதால், அரசுத் தரப்பு வழக்கு அடிப்படையில் தவறானது என்று தேஹத்ராய் சமர்ப்பித்தார்.

வழக்கு அதிரடியாக ரத்து

முறையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் நிதி உதவி மற்றும் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்வதில் மட்டுமே அறக்கட்டளையின் பங்கு இருந்ததால், சட்டத்தின் கீழ் எந்தக் குற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் வாதிட்டார். மனுதாரர்கள் மற்றும் டெல்லி அரசு ஆகிய இரு தரப்பினரின் விரிவான வாதங்களைக் கேட்ட பிறகு, நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா தீர்ப்பை இன்று ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் ஆதாரம் இல்லை எனக்கூறிய நீதிபதி 2021ல் தொடரப்பட்ட வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டார்.