கதர்வாரியத்தின் 2017ம் ஆண்டுக்கான காலண்டர், டைரியில் வழக்கமாக அச்சடிக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தி ராட்டையில் நூல்நூற்கும் படத்துக்கு பதிலாக, பிரதமர் மோடி ராட்டையில் நூல் நூற்கும் படத்தை இந்த முறை அச்சிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு உட்பட்ட கதர் கிராம தொழில் ஆணையத்தின் சார்பில் ஆண்டுதோறும் சுவற்றில் மாட்டப்படும் காலண்டர், டைரி ஆகியவை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.

இந்த ஆண்டு வழங்கப்பட்ட காலண்டர், டைரியில், ராட்டையில் காந்தி நூல் நூற்கும் படத்துக்கு பதிலாக, பிரதமர் மோடி கதர் ஆடை, கோட், பைஜாமா அணிந்து நூல்நூற்கும் படம் இருந்தது. இதைக் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்தனர். 

ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த கதர் கிராம தொழில் ஆணையத்தின் தலைவர் வினய்குமார் சக்சேனா, “ இது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. வழக்கத்தற்கு மாறானது அல்ல. இதேபோன்று இதற்கு முன் நடந்துள்ளது '' எனத் தெரிவித்தார். 

ஆனால், மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் தூஷார் காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உள்நோக்கம் இருக்கிறது

மகாத்மாகாந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கூறுகையில், “ ஆதாயம் பெற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு திட்டமிட்டு மோடியின் அரசு செயல்படுகிறது. அரசு ஏதோ தவறு செய்துவிட்டது என்று நாம் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. இதை திட்டமிட்டு செய்த தவறு. பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நீங்கள் கதர்வாரியத்துக்கு அடையாளமாக வந்தால், திறமையில்லாதவர்கள், திறன் இல்லாதவர்கள், நேர்மையில்லாதவர்கள் வந்து அந்த அமைப்பை கலைத்து விடுவார்கள்'' எனத் தெரிவித்தார்.மோடி என்பவர் யார்?

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “ நாட்டின் உயர்ந்த சின்னமான ராட்டைச் சக்கரம், மகாத்மா காந்தி ஆகியோரின் படம் கதர்வாரியத்தில் இருந்து நீக்கப்பட்டு, மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தி, மோடி என்பவர் யார்?'' எனத் தெரிவித்துள்ளார்.

மங்கல்யான் விளைவு

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கூறுகையில், “ கதர்கிராம டைரி, காலண்டரில் காந்தி படத்துக்கு பதிலாக மோடி படம் இடம்பெற்றுள்ளது. இது கதர் மற்றும் கிராக தொழில்களை முன்னிறுத்தி மோடி தனக்கு ஆதாயம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார். நாட்டின் தேசப்பிதாவோடு தன்னை நெருக்கமாகக் காட்டிக்கொள்ள முனைகிறார். ஏற்கனவே இதேபோல், மங்கல்யான் விண்கலம் அனுப்பும்போதும் தன்னுடைய அரசால்தான் இதை செய்ய முடியந்தது என்று தனக்கு ஆதாயத்தை மோடி தேடிக்கொண்டார். ஆனால், இந்த திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மன்மோகன்சிங்கால் தொடங்கப்பட்டது.''  எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “ காந்தியும், கதரும் நம் வரலாற்றின் அடையாளங்கள். சுயராஜ்ஜியம், போராட்டத்தின் அடையாளங்கள்.ஆனால், காந்தியின் படத்தை நீக்கியது, மிகப் பெரிய அவமதிப்பாகும்'' எனத் தெரிவித்துள்ளார்.