தேசிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில், ஏழைகளுக்கும், வேலை இல்லாத இளைஞர்களுக்கும் குறைந்தபட்சம் மாதம் ரூ. 1500 பராமரிப்பு தொகை அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டால், வரும் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய சமூக பாதுகாப்பு திட்டம் வளர்ந்த நாடுகளான இங்கிலாந்து, பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. அதே போன்ற திட்டத்தை இங்கும் கொண்டு வரும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து மத்தியநிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரு கூறுகையில், “ வேலை கிடைக்காத இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும் தேசிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் மாதம் ரூ.1500 தொகை அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தும் முன் அதன் சாதகங்கள், பாதகங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதால், அதை அடிப்படையாக வைத்தே முடிவு எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
ஒரு வேளை இந்த திட்டத்துக்கு மத்தியஅரசு பச்சைக் கொடி காட்டும் பட்சத்தில், வேலை இல்லாத இளைஞர்களுக்கும், ஏழைகளுக்கும் மாதம் வழக்கப்படும் தொகைக்காக ரூ. 3 லட்சம் கோடியை கூடுதலாக அரசு செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

அதேசமயம், அடுத்த நிதியாண்டில் மத்தியஅரசு நிதிப்பற்றாக்குறையை 3 சதவீதமாக கட்டுக்குள் வைக்க திட்டமிட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல், அடுத்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வரியையும் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது மத்திய அரசு, ஆதலால், இந்த திட்டத்துக்கான நிதியை திரட்டுவதில் சிரமம் இருக்காது என்பதால் செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநில அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் , ஏழைகள், வேலையில்லாத இளைஞர்களுக்கு பராமரிப்பு தொகை அளிக்கும் திட்டத்தை முதல் மாநிலமாக அமல்படுத்தியுள்ளது.
இது குறித்து தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறுகையில், “ தேசிய அளவிலான சமூக பாதுகாப்பு திட்டம் என்பது, ஏழ்மையை விரட்டுவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது போன்ற சவலான திட்டங்களை செயல்படுத்துவது என்பது கடினமான விசயமாகும்'' எனத் தெரிவித்துள்ளார்.
