பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை.. உம்மன் சாண்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள்
கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு கேரள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் இன்று ஒரு நாள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “ஒரே ஆண்டில் நாங்கள் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோம். இருவரும் மாணவர் அரசியல் களத்திலிருந்துதான் பொது அரசியலுக்கு வந்தோம். ஒரே நேரத்தில் பொது வாழ்க்கையை முன்னெடுத்தோம். உம்மன் சாண்டி சிறந்த நிர்வாகியாகவும், மக்கள் மத்தியில் நெருக்கமானவராகவும் இருந்தார். அவரிடமிருந்து விடைபெறுவது கடினமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “உம்மன் சாண்டி அவர்களின் மறைவுடன், பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, கேரளாவின் முன்னேற்றத்திற்காக உழைத்த பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரை நாம் இழந்துவிட்டோம். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராகப் பதவி வகித்தபோதும், பின்னர் நான் டெல்லிக்குச் சென்றபோதும் அவருடன் நான் நடத்திய பல்வேறு தொடர்புகளை நான் நினைவில் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ஆதரவாளர்களுடனும் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "அன்பின் சக்தியால் உலகை வென்ற மன்னனின் கதை, அதன் கடுமையான முடிவை காண்கிறது" என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, "உம்மன் சாண்டியின் அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு தலைமை கேரளாவின் வளர்ச்சிக்கு வித்திட்டது. மட்டுமல்லாது மாநில அரசியலில் புதிய முத்திரையை பதித்தது. அவருடைய சேவைக்காக என்றும் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ உம்மன் சாண்டி ஒரு முன்மாதிரியான காங்கிரஸ் தலைவர். அவர் ஆற்றிய பணிக்காக மக்களால் என்றும் நினைவுகூரப்படுவார்” என்று கூறியுள்ளார்.
மக்களின் முதல்வர் டூ சோலார் ஊழல் வரை.. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மறுபக்கம்
Oommen Chandy: கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார் - மறைவுக்கு காரணம் என்ன?