1640-ம் ஆண்டு புனித ஜார்ஜ் தினமான ஏப்ரல் 23-ம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால் அந்த கட்டடத்திற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக் கொடியேற்றுவார். ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள இந்த கோட்டை கொட்டளத்தின் வரலாறு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புனித ஜார்ஜ் கோட்டை
இப்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள பகுதி முதலில் விஜயநகர பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. பின்னர் சுல்தான், முகலாயர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. அதன்பின்னர் டச்சு கம்பெனியின் அலுவலர் பிரான்சிஸ் டே முதலில் அமைத்த இந்த சிறிய கோட்டை பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1640-ம் ஆண்டு புனித ஜார்ஜ் தினமான ஏப்ரல் 23-ம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால் அந்த கட்டடத்திற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது. இந்த கோட்டையை சுற்றியே ஆங்கிலேய வணிகர்கள் வீடுகளை கட்டி குடியேறினர்.
கோட்டைக்குள் வெள்ளையர்கள் வாழ்ந்த பகுதி “ வெள்ளையர் நகரம்” என்றும், வெளியே உள்ளூர் வணிகர்கள் வாழ்ந்த பகுதி “கருப்பர்கள் நகரம்” என்றும் அழைக்கப்பட்டது. இந்த காலத்தில் கோட்டைக்குள், புனித மேரி ஆலயம், அருங்காட்சியகம் ஆகியவை கட்டப்பட்டது.
ஆசியாவிலேயே மிக உயர்ந்த கொடி மரம் : யேல் என்பவர் 1687 முதல் 1692 வரை சென்னை மாகாண ஆளுநராக இருந்த போது தான் தேக்கு மரத்தால் ஆன ஆசியாவிலேயே உயர்ந்த கொடிமரம் அமைக்கப்பட்டது. இந்த கொடிமரத்தில் டச்சு கம்பெனியின் கொடிக்கு பதில் பிரிட்டிஷ் கொடி பறக்கவிடப்பட்டது. இந்த கொடி மரம் 150 அடி உயரம் கொண்டது. நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்த கொடி மரத்தில் தினந்தோறும் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
இந்த மரத்தாலான கொடிக்கம்பமானது எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் கடுமையாக சேதமடைந்தது. பின்னர் பெல் நிறுவனத்தின் உதவியுடன் கடல் காற்று போன்றவற்றால் எளிதில் துருப்பிடிக்காத வகையில் எஃகு கொடிக்கம்பம் ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் ஜெயலலலிதா முதலமைச்சராக இருந்த போது 1994-ம் ஆண்டு ‘எல் அண்ட் டி’ நிறுவனம் 119 அடி உயரத்தில் கொடிக்கம்பத்தை நிறுவியது. இந்த கொடிக்கமபம் 3 அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கு 69 அடி உயரத்தில் 20 அங்குல எஃகு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது. 2-வது அடுக்கு 30 அடி உயரத்தில் 12 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது. 3-வது அடுக்க 20 அடி உயரத்தில் 6 அடி இரும்புக் குழாயால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கொடிக்கம்பத்தை தாங்கும் வகையில் சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட இரும்பிக் கம்பிகளால் தாங்கி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிமரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதி கோட்டை கொத்தளம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தினமும் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தி காலை 6 மணிக்கு தேசிய கொடி ஏற்றி, மாலை 6 மணிக்கு கொடியை இறக்குகின்றனர். கொடிக்கம்பம், கோட்டை கொத்தளம் ஆகியவற்றின் பராமரிப்பு பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கொடி கம்பம் புதுப்பித்தல் பணியும், கோட்டை கொத்தளத்தின் கூரை மராமரத்து பணியும் நடந்து வருகிறது.
