பாக்ஸ்கான் - வேதாந்தா ஒப்பந்த முறிவு: ஜெய்ராம் ரமேஷுக்கு பதிலடி கொடுத்த அமித் மாளவியா
பாக்ஸ்கான் - வேதாந்தா நிறுவனங்களுக்கு இடையேயான செமி கண்டக்டர் ஒப்பந்த முறிவு குறித்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியதற்கு பாஜகவின் அமித் மாளவியா பதில் கொடுத்துள்ளார்.
செமி கண்டக்டர் தயாரிப்பில் உலக அளவில் முன்னிலை வகிக்கும் தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனமும் இந்தியாவைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனமும் கடந்த ஆண்டு குஜராத்தில் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆனால், செவ்வாய்க்கிழமை வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து செமி கண்டக்டர் தயாரிப்பதற்கான திட்டத்தில் இருந்து பாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் விலக முடிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளது. இதுகுறித்து பாக்ஸ்கான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேதாந்தாவுடனான ஒப்பந்தத்தில் இருத்து விலகும் பணியில் பாக்ஸ்கான் ஈடுபட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் தத்தளிக்கும் வட மாநிலங்களில் ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு
இந்நிலையில், செமி கண்டக்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான பாக்ஸ்கான் பின்வாங்கி இருப்பது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ட்விட்டரில் பதிவிட்ட ஜெய்ராம் ரமேஷ், "பாக்ஸ்கான் - வேதாந்தா ஒப்பந்தம் முடிந்துவிட்டது. ஆனால் மைக்ரான் செமி கண்டக்டர் சிப் அசெம்பிளி, பேக்கேஜிங் மற்றும் டெஸ்டிங் ஆகியவற்றில் இன்னும் இருப்பதாகத் தெரிகிறது. 2.75 பில்லியன் டாலரில் மைக்ரான் வெறும் 30% மட்டுமே செலுத்துகிறது, 50% மத்திய அரசில் இருந்தும் 20% குஜராத் அரசிடம் இருந்தும் வருகிறது. இது அமெரிக்க நிறுவனத்திற்கு மிகப்பெரிய மானியமாகத் தோன்றுகிறது." என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள பாஜக தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். "இது கடினமானது என்று எனக்குத் தெரியும். ஆனால் முயற்சி செய்து புரிந்துகொள்ளுங்கள், ஜெய்ராம். செமிகண்டக்டர்கள் உற்பத்தி என்பது மிகவும் சிக்கலான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறை. இதற்கு குறிப்பிடத்தக்க மற்றும் நீடித்த முதலீடுகள் தேவைப்படுகின்றன."
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி!
"செமிகண்டக்டர் தயாரிப்புகளில் வெற்றி பெறுவதற்கு (அ) வடிவமைப்புத் திறன், (ஆ) தொழில்நுட்பத்தை பயன்பாடு, (இ) உற்பத்திக்கான குறைந்த செலவு மற்றும் உறுதியான ஆஃப்-டேக் (ஈ) சுழற்சியைத் தக்கவைக்க நிதித் திறன் ஆகியவை தேவை." என்று கூறியுள்ள அமித், மைக்ரான் போன்ற உலகளாவிய செமிகண்டக்டர் நிறுவனங்களின் இருப்பு, இந்தியாவின் தயார்நிலை குறித்து மற்ற உலகளாவிய செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கும் நம்பிக்கையை அளிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
"செமிகண்டக்டர் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் முதலீடுகளை ஈர்க்க குறிப்பிடத்தக்க ஊக்குவிப்புகளை வழங்குகின்றன. எனவே, முதலீட்டை ஈர்க்க அதிக ஊக்கத்தொகை தேவைப்படுகிறது." என்றும் அமித் மாளவியா குறிப்பிட்டுள்ளார்.
இணைய சமநிலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்